சென்ற இதழில் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சியைப்பற்றி விரிவாக விளக்கி இருந்தோம். இந்தச் சடங்குகள் எல்லாம், ஆண்டாண்டு காலமாகவே நமது முன்னோர்களால் சொல்லப்பட்டும், செய்யப்பட்டும் வந்த வழிமுறைகள். பிள்ளைத்தமிழில் பெரியாழ்வார் காது குத்தும்போது பாடுவதற்கு என்றே பன்னிரண்டு பாடல்களை அழகான தமிழில் ஒரு பதிகமாக இயற்றியிருக்கின்றார் என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது.
இது வேறு எந்த தமிழ் நூல்களிலும் இல்லை. நாம் எதைப் படிக்கிறோமோ, அதை வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும் என்ற உறுதி உள்ள வைணவர்கள், தங்கள் இல்லங்களில் குழந்தைகளுக்கு காது குத்தும் விழா நடக்கின்றபொழுது இந்த 12 பாசுரங்களையும் பாடுகின்றனர்.
அற்புதமான பாட்டு ஒன்று
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்!
உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே
அஞ்சி. மதுசூதனே என்று இருந்தேன்
புண் ஏதும் இல்லை உன்காது மறியும்
பொறுத்து இறைப் போது இரு நம்பீ!
கண்ணா! என் கார்முகிலே! கடல்வண்ணா
காவலனே! முலை உணாயே
கண்ணனுக்கு காது குத்த ஏற்பாடு செய்த தாய் யசோதை அழைக்கிறாள். அவனோ காது குத்துவதற்கு முன் அழுகிறான். விண்ணுக்கே கேட்பது போல,“அய்யய்யோ, வலிக்குமே” என்று பெரும் சப்தத்தோடு அழுகின்றான். அவனை சமாதானப்படுத்தும் தாய், ‘‘நீ அழக்கூடாது, நான் உனக்கு கொஞ்சமும் வலிக்காமல் காது குத்துவேன். அது மட்டுமில்லை காதுக்கு நல்ல அணி கலன்களைப் போடுவேன்.
உனக்கு தின்பண்டங்கள் தருவேன்’’ என்றெல்லாம் சமாதானம் செய்து, கண்ணனை அழைத்து, மடியில் வைத்து காது குத்தும் விழா நடத்துவதாக பாசுரத்தில் வருகின்றது. நம் குடும்பத்தில் காது குத்தும் விழாவில் நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடித்துக்காட்டுகிறார் பெரியாழ்வார். இந்த அனுபவமும் ஆனந்தமும் தானே வாழ்க்கை.
சரி காது குத்தியாகிவிட்டது.
அடுத்து குழந்தையை நல்லபடி வளர்க்க வேண்டும். இதில்தான் சாஸ்திரம் பல விதிகளைச் சொல்கிறது. பொறுப்புகளை எடுத்துக் காட்டுகிறது. குழந்தை பிறந்ததை ஒட்டி, சில சடங்குகளைச் செய்யும் நாம், அவர்களை வளர்க்கும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். பழைய தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் பெற்றோர்கள் மிகச்சிறந்த அறிவுடைமையும், திறமையும், அன்புடைமையும் கொண்டவர்களாக குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்கிறது.
ஒரு அருமையான தமிழ்ப் பாட்டு உண்டு
எந்தக் குழந்தையும் பிறக்கும்போது, கள்ளம் கபடம் இல்லாமல் நல்ல குழந்தைகளாகவே பிறக்கிறது. ஆனால், அது பின்னாளில், சில சமயங்களில் நேர் எதிராக மாறிவிடுகிறது. காரணம் வளர்ப்பு முறை.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே- பின்
நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே
என்றொரு பாட்டு உண்டு.
இங்கே “அன்னை வளர்ப்பதிலே” என்ற வரி இருந்தாலும்கூட, தந்தைக்கும் மற்றும் உள்ள உறவுகளுக்கும் பங்கு உண்டு. மிக நெருங்கிய உறவாகிய அன்னையையும் தந்தையையும் பார்த்துத் தான் ஒரு குழந்தை பேசக் கற்றுக்கொள்கின்றது. பல்வேறு செயல்களைச் செய்யக் கற்றுக் கொள்கிறது.
ஒரு குழந்தையை எல்லோருக்கும் நன்மை தரும் மகத்தான மனிதனாக உருவாக்குவதில் பெற்றோர்களுக்கும் பெரும் கடமை உண்டு. ஒரு குழந்தையை நல்லபடி வளர்க்கும் பொறுப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியைச் சொல்லலாம். காந்திக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் மூத்தவர் ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ். மணிலால் காந்தியின் இரண்டாவது மகன். சிறுவயதிலேயே அவர் காந்தியால் தென்னாப்ரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். பத்து வயதில் காந்தியுடன் ஐந்துகிலோமீட்டர் நடைப்பயணம் சென்றுகொண்டிருந்த போது தன் மூக்குக்கண்ணாடியை மறந்து வைத்துவிட்டார் மணிலால்.
காந்தி ‘‘நீ நடந்துசென்று அந்த கண்ணாடியை எடுத்து வா’’ என அனுப்பினார். மேலும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து சென்று கண்ணாடியை எடுத்துவந்தார் மணிலால்.
‘பொதுவாழ்க்கையில் இருப்பவனுக்கு மறதி இருக்கலாகாது. சின்ன மறதி பெரிய மறதிகளை உருவாக்கும்’ மணிலாலுக்கு அப்போது பத்தே வயதுதான்.
ஆனால் பல்லாயிரம் பேரின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்று போராடவேண்டிய மனிதராக மட்டுமே காந்தி அந்தக்குழந்தையை பார்த்தார். அவர் செய்யும் சிறிய தவறு பல்லாயிரம் பேரின் வாழ்க்கையைப் பாதிக்கும் என எண்ணினார்.
மனிதனின் 90 சதவீத மூளை வளர்ச்சி பிறந்த முதல் 6 ஆண்டுகளில் நடைபெறுகிறது. எனவே 6 வயதுக்குள் குழந்தைகளுக்கு நாம் அமைத்துக் கொடுக்கும் அடித்தளம், அவர்களை வாழ்க்கை முழுவதும் வழிநடத்தும். இதைப் பெற்றோர்கள் உணர்ந்தால் குழந்தை வளர்ப்பை சிறப்பாக செயல்படுத்தலாம். குழந்தைகளின் தனித்துவத்தை புரிந்து கொண்டு தன்னம்பிக்கையோடு அவர்கள் வளர வழிகாட்டலாம்.
குழந்தையைப் பெற்றெடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். பொன்முடியார் பாடல் இது.
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”
– (புறம்: 312)
எனப் புறநானூற்றில் கூறியுள்ளார். புறந்தருதல் எனும் சொல் பாதுகாத்தல் எனப்பொருள்தரும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு தாயாக நின்று, வீட்டிற்கும், நாட்டிற்கும் உள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டிய ஆளுமையுள்ள தலைசிறந்த பெண்ணாகப் பொன்முடியார் என்ற பெண் கவிஞர் திகழ்ந்துள்ளார்.
பிள்ளையைச் சான்றோனாகப் பிறர் மெச்சும்படி உருவாக்க வேண்டும்.
பிள்ளையை பெற்று விட்டால் போதுமா? –
பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா
என்ற பாடலும் இதை எளிமையாக கூறுகிறது.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
என்ற குறளில் இந்த விஷத்தை ஆணித்தரமாக வள்ளுவர் காட்டுகின்றார். இந்த குறட்பாவில் தந்தை எனக் குறிப்பாகச் சொல்லப்பட்டாலும், இங்கே அது பொதுவாகப் பெற்றோரைக் குறித்து நிற்பது. எனவே, இப்பாடலில் சொல்லப் பட்ட “நன்றி” என்பது பெற்றோர், அதாவது தாய் தந்தையர் இருவரும் செய்யும் நன்மைகளையே குறிக்கிறது. இன்றும் “எங்க அம்மாவால்தான் இந்த உயரம் அடைந்தேன்” என்று சொல்லும் பல மேதைகள் உண்டு.
‘மகற்கு’ என ஒருமையில் கூறியிருப்பதால் இது ‘மகனுக்கு’ என்று ஆண்பாலார்க்குச் சொல்லப்பட்டது என்பதல்ல. இப்படிக் கூறப்பட்டாலும் இதில் மகளும் அடங்குவாள்; இப்பாடல் இரு பாலருக்கும் பொருந்தும். எந்தத் துறையில் பிள்ளைகள் விருப்புடன் இருக்கிறார்களோ அதில் ஈடுபாடு உண்டாகச் செய்து, அவர்களிடம் மறைந்துள்ள பெரும் ஆற்றல்களை வளர்த்து, வெளிக்கொணர்ந்து, எழும் சவால்களை எதிர்கொண்டு, வெல்லும் திறன் வளர தந்தை உதவி செய்தல் என்பது ‘முந்தி
யிருப்பச் செயல்’ என்ற தொடர் குறிப்பதாகக் கொள்வது பொருத்தமாகலாம்.
தம் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி தந்து, அவர்கள் வாழ்க்கையில் வெற்றி காண்பதற்கு உகந்த சூழலை உருவாக்கிக் கொடுத்து, பரந்த உலக அரங்கில், அவர்கள் திறமைக்கான முதலிடத்தில் இருக்கச் செய்ய தந்தையர் துணையாக இருக்க வேண்டும் என்ற கருத்து சிறப்பாக அமையும்.
தொகுப்பு: தேஜஸ்வி