திருவாரூர் : திருவாரூர் நகரில் பழைய பேருந்து நிலையம் ₹16 கோடி மதிப்பில் மேம்படுத்தும்பணி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பேருந்து நிலையமானது முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள ரவுண்டானா வரையில் மினி பேருந்துகள் மற்றும் ஒரு சில அரசு பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று ரவுண்டானா அருகில் இருந்து நாகலூர் செல்லக்கூடிய அரசு நகர பேருந்து ஒன்று அங்கிருந்து புறப்பட்டு 100 அடி தூரம் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.
இந்த பேருந்தை பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (52) ஓட்டி சென்றார். அப்போது எதிரில் மேம்பாலம் பைபாஸ் சாலையில் இருந்து கீழே ரோடு ரோலர் ஒன்றுவந்து கொண்டிருந்தது. அதனை எட்டியலூர் கிராமத்தை சேர்ந்த குமார் (50) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென அந்த ரோடு ரோலரின் முன்பக்க சக்கரம் கழன்று தனியாக ஓடியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த ரோடு ரோலர், நாகலூர் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க ஓரத்தில் உரசியபடி மோதிவிட்டு சென்று நின்றது. இதனையடுத்து பேருந்து டிரைவர், பேருந்தினை உடனடியாக நிறுத்தியுள்ளார்.
எனவே பயணிகள் எந்த காயமுமின்றி தப்பித்தனர். ரோடு ரோலர் சக்கரம் கலன்ற சம்பவத்தில் சாலையின் இடதுபுறமாக வந்து கொண்டிருந்த கங்களாஞ்சேரியை சேர்ந்த கோபு மகன் விஷ்ணுபிரியன் (22) என்பவரின் டூ வீலரில் இடித்த நிலையில் அவர் நிலை தடுமாறி விழுந்தார். இதில் இடது கை முழங்கையில் சிராய்ப்பு காயம் மற்றும் உள் காயம் ஏற்பட்டது. இதையடுத்து விஷ்ணுபிரியன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோடு ரோலரை கிரேன் மூலம் அகற்றியதையடுத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.