சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த ரூ.35 லட்சம் முதல் ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பரந்தூரில் 2வது விமான நிலையம் அமைக்கும் பணிகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. பரந்தூர் விமான நிலையம் அமைக்க திட்ட அனுமதிக்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
அதனை பரிசீலனை செய்த விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளது. மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல்கட்ட ஒப்புதலை அளித்துள்ளன. மேலும், விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக தொழில்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒட்டுமொத்தமாக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து மொத்தமாக 5,746 ஏக்கர் நிலத்தை விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ளது. அதில் 3,331.25 ஏக்கர் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, உரிமையாளர் எவ்வளவு நிலம் வைத்துள்ளார் என்பதை கணக்கீடு செய்து அவர் எந்தப் பகுதிகளுக்குள் வருகிறார், அந்தப் பகுதியில் ஏக்கருக்கு விலை எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்பதை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கான இழப்பீடு கணக்கீடு செய்யப்பட உள்ளது. மேலும், அவர்களுக்கான இழப்பீட்டு தொகை அறிவித்த உடனேயே அந்த தொகையை அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய விமான நிலைய கட்டுமான பணிகளை மெற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை அண்மையில் டிட்கோ தேர்வு செய்திருந்தது. இதனையடுத்து அடுத்தாண்டுக்குள் பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிகளை 4 கட்டமாக பிரித்து அடுத்தாண்டு தொடங்கி 2028ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.