காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்கள் எந்தெந்த கிராமங்களில் எவ்வளவு எடுக்கப்படுகிறது என வரையறுத்து நில எடுப்பு அறிவிப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிட்டு வந்தது. விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள், தங்கள் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக கூறி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நாள்தோறும் கிராம மைதானத்தில் ஒன்று திரண்டு 764வது நாளாக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இவர்கள், தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தாலும், அதனை கண்டு கொள்ளாமல் தற்பொழுது ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது.
ஏகனாபுரத்தில் உள்ள நிலங்களின் வகைகள் சர்வே எண்கள் கிராம மக்களின் பெயர்கள் உள்ளிட்டவை குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏகனாபுரம் கிராமத்தில் 152.95 ஏக்கர் பரப்பளவிலான 6,19,250 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த உள்ளனர். நில எடுப்பது குறித்து ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு ஏகனாபுரம் கிராம மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. இந்தநிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற இரவு நேரம் போராட்டத்தை தீவிரமாக ஏகனாபுரம் கிராம மக்கள் நடத்தினர். எப்போதும் கோயில் அருகே போராட்டம் நடைபெறும் நிலையில் நேற்று, அம்பேத்கர் சிலை சிலை முன்பு பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
இதில், பேசிய போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறுகையில், ‘பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் எங்களுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். விவசாய காவலர் எனக்கூறி கொள்ளும் எதிர்க்கட்சி ஆதரவு தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார்களா என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் திருட்டுத்தனமாக அதிகாரிகள், கணக்கெடுப்பை நடத்தி பின் வாசல் வழியாக எங்கள் கிராம நிலத்தை கையகப்படுத்துவேன் என அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. காவல்துறை ஒருபுறம் எங்களுடன் இணக்கமாக செல்ல முயற்சி செய்தாலும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு எதிராக இருக்கிறது.
இந்த, அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் இனி எந்தவித அறிவிப்பும் வரக்கூடாது. அப்படி வந்தால் நாங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் எல்லைக்கும் செல்ல தயார். அப்படி ஏதாவது அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுதான் பொறுப்பு என ஆக்ரோஷமாக தெரிவித்தனர். தொடர்ந்து, கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் கிராம மக்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று போராட்டத்தை போலீசார் கலைத்தனர். இதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் வழக்கு பதிவு
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் 125 நபர்கள் மீது போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.