அரி, அயன் காணா அறிவு ஜோதியாக சிவபெருமான் விஸ்வரூபத்தில் நின்ற அரிய தலம் திருவண்ணாமலை. அப்பரும், சம்பந்தரும் நாவார தேவாரம் பாடிய நன்னகரம். மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடிய அருள்நகரம். ‘அருணை வாழ் கிரியை நினைக்க எய்தலாம் முக்தி’ என போற்றப்படும் மோட்சபுரியில் நடைபெறும் பரணி தீபம். தீபத் திருவிழா உற்சவத்தின் நிறைவாக 10ம் நாளன்று, கார்த்திகை மாதத்தின் பரணி நட்சத்திரத்தில் அதிகாலை 4 மணிக்கு திருக்கோயிலில் பரணி தீப விழா நடைபெறுகிறது. ஆதியும், அந்தமும் இல்லாத பரம்பொருளான இறைவன் ஒருவனே. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்ச பூதங்களையும் ஆட்சி செய்யும் இறைவன், ஏகனாகவும் அதே நேரத்தில் அனேகனாகவும் அருள்புரிந்து, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து காரியங்களையும் நிறைவேற்றுகிறார் எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதே பரணி தீப விழாவின் உட்பொருளாகும்.பரணி தீபவிழா நடைபெறும் நாளில், அதிகாலை 2 மணியிலிருந்தே அண்ணாமலையார் கோயில் பக்தர்களின் வெள்ளத்தால் நிரம்பியிருக்கும். மங்கள முழக்கம், வேதம் முழங்குதல், நறுமணம் கமழும் ஹோமம் என அமர்க்களப்படுவதால் திருக்கோயில் திருப்பிராகாரங்கள் கயிலாயமாகவே காட்சி தரும்.
பரணி தீபத்தன்று அண்ணாமலையாருக்கு சந்தனம், வாசனை எண்ணெய், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீறு, இளநீர், சொர்ணபுஷ்பம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும். பட்டாடை உடுத்தி, தங்க நாகாபரணம் சாற்றி, வண்ண மலர்மாலைகள் அணிவித்து நிவேதனம் செய்யப்படும்.கருவறையில் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் நடைபெறும். அதேசமயத்தில், மிகச்சரியாக அதிகாலை 4 மணி அளவில், சுவாமி சந்நதியில் ஒரு மடக்கில் சிவாச்சாரியார்கள் தீபத்தை ஏற்றுவார்கள். அதைத் தொடர்ந்து, அந்த தீபத்தைக் கொண்டு ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றி வைப்பார்கள். இதுவே பரணி தீப தரிசனம். அந்த அதிகாலையில் மென்மையான ஓர் அனலும் தணலும் நம் உடலை உரசி நெஞ்சினுள் புகும். தியானத்தில் அமர்ந்தெழுந்த ஒரு அனுபவத்தை இந்த தீப தரிசனம் அகத்தினுள் நிகழ்த்தும். அண்ணாமலையாருக்கு கற்பூர தீபம் ஏற்றப்பட்டதும், அதனைக் கொண்டுவந்து ஐந்து மடக்கு தீபங்களுக்கும் ஆரத்தி காண்பிக்கப்படும். பரணி தீபம் ஏற்றும்போது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ எனும் பக்தி முழக்கம் விண்ணையே அதிரச் செய்யும். அதைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள அனைத்து சந்நதிகளிலும் தீபம் ஏற்றப்படும். மேலும், அண்ணாமலையார் சந்நதியில் இருந்து வைகுந்த வாயில் வழியாக தீபமலைக்கு பரணி தீப தரிசனம் காண்பிக்கப்படும்.
பரணி தீபம் ஏற்றும் சிவாச்சாரியாருக்கான விரத முறை மிகக்கடுமையான தவமாகும். தொடர்ந்து 108 நாட்கள் தூங்கா விளக்கை ஏற்றி வைத்து, அது அணையாதபடி காத்துக்கொண்டே விரதம் கடைப்பிடிப்பார். அந்த அளவுக்கு பரணி தீபம் புனிதமானது.முதலில் ஒரு மடக்கில் ஏற்றப்படும் ஒற்றை தீபத் தால், ஒன்றே பரம்பொருள் என்பதையும், அதிலிருந்து பிற தீபங்களை ஏற்றுவதன்மூலம் ஏகன் அனேகன் என்பதையும் உணரலாம். மலைமீது ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிப்போர், திருக்கோயிலில் அதிகாலை ஏற்றப்படும் பரணி தீபத்தையும் தவறாமல் தரிசிப்பது பெரும் ஆத்ம நிறைவைத் தருவதாகும்.