அந்தத் தம்பதியர்களுக்கு எல்லாச் செல்வங்களும் இருந்தன. ஒரே ஒரு குறை இருந்தது. மழலைச் செல்வம் மட்டும் இல்லை. ஒரு ஜோதிடரிடம் சென்றனர். ஜோதிடர் ஜாதகத்தைத் துல்லியமாகப் பார்த்து விட்டுச் சொன்னார். இந்த ஜாதகத்தில் கடுமையான தோஷம் இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் இருந்தால் பரவாயில்லை. இரண்டு பேர் ஜாதகத்திலும் இருக்கிறது. ஐந்தாம் இடம் கெட்டுப் போய் கிடக்கிறது. ஒன்பதாம் இடம் சரி இல்லை.
ஆக, பூர்வ புண்ணியமும், பாக்கியஸ்தானமும் கெட்டுப்போன ஜாதகத்தில் வினையின் அடைப்படையில் குழந்தை பாக்கியம் கிடைக்க கோள்கள் அனுமதிக்காது. இனி உங்கள் விருப்பம் நிறைவேறுவது கோள்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும், பெருமாளிடம்தான் இருக்கிறது. ஆனால், அவரும் லேசில் மசிய மாட்டார். நீங்கள் தாயாரிடம் பிரார்த்தனை செய்துதான் இதற்குத்தீர்வு காண வேண்டும்.
நான் சொல்லும் ஆலயத்திற்குச் சென்று முறையாக நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். அவள் அருளால் தோஷங்கள் நீங்கி சந்தான பாக்கியம் ஏற்படும். அவர்களும் அந்த ஆலயத்திற்குச் சென்றனர். அங்கே பட்டர்கள் வழி காட்டல்படி, தாயாரிடமும், ஆண்டாளிடமும், பின் பெருமாளிடமும் பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு நல்லதொரு சத் சந்தானம் கிடைத்தது. அந்த கோயிலுக்குத்தான் நாம் இன்று சென்று கொண்டிருக்கிறோம். காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருத்தலம் அது. ராமாயண நிகழ்வோடு தொடர்பு கொண்டது. அது என்ன சம்பவம் என்று பார்த்து விடலாமே?
சடாயு மோட்சம்
‘ஜடாயு’ என்பதற்கு ‘பொன்னிற இறகு கொண்ட பறவை’ என்பது பொருள். சடாயு கருடனின் தம்பியான அருணனின் மகன். சம்பாதியின் தம்பி. ராமனின் தந்தை தசரதனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தவன். ராமன் சீதையோடு பஞ்சவடியில் வனவாசம் செய்யும் போது, மாயமானை அனுப்பி, ராம லட்சுமணர்களைப் பிரித்து, தந்திரமாக சீதையை ராவணன் சிறை எடுத்துச் செல்கின்றான். சீதையை பர்ண சாலையோடு தூக்கி தோளின் மீது வைத்துக் கொண்ட ராவணன் வான் வழியே புறப்பட்டான்.
அவனுடைய இந்த அடாத செய்கையையும் ஆவேசத்தையும் பார்த்த சீதை கதறுகிறாள். மேகத்தில் இருந்து நிலத்தில் விழுந்த மின்னலைப் போல மயக்கம் அடைந்தாலும் கொஞ்ச நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த சீதை, நிலை குலைந்து, “மலையே, மானே, மயிலே, குயிலே,” என்று அபயம் கேட்கிறாள். ராவணனும் ‘‘என்னிடமிருந்து எவன் வந்து உன்னைக் காப்பாற்றுகின்றான், பார்ப்போம்’’ என்கிறான். சீதைக்கு அப்பொழுது கொஞ்சம் துணிச்சல் வருகிறது. தைரியத்துடன் பேசுகிறாள்.
‘‘ஆண்பிள்ளை இல்லாத பொழுதில் வந்து என்னைத் தூக்கிக் கொண்டு செல்லும் நீ பெரியவீரனா?’’ இந்த உரையாடலின் போது தான் ஜடாயு வருகின்றார். ‘உத்தமன் தேவியை உலகொடு பெயர்த்துக் கொண்டு தேரில் வைத்து நீ போவது எங்கே?’ என்று உரக்கக் கூறிக்கொண்டே, வானையும் திசைகளையும் மறைப்பவன் போலத் தன் பாதுகாப்பான சிறகுகளை விரித்தபடி சடாயு வருகிறார்.“ராவணா! உன் இனத்தோடு உன் செல்வ வாழ்வையெல்லாம் சுட்டொழித்தாய்! இத்தகைய தீச்செயலை ஏன் செய்யத் தொடங்கினாய்? கற்புடைய சீதையை விட்டுச்செல்.’’
“கெட்டாய் கிளையோடும்; நின் வாழ்வை எலாம்
சுட்டாய்; இது என்னை தொடங்கினை? நீ
பட்டாய் எனவே கொடு பத்தினியை
விட்டு ஏகுதியால், விளிகின்றிலையால்
என்பது கம்பன் பாடல்.
‘பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின்
மாதா அனையாளை மனக்கொடு, நீ
யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்?
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ?’’
“பேதையே! எவ்வளவு பெரிய தவறு செய்கிறாய். அதன் விளைவு தெரியுமா? அவள் அகில உலகங்களுக்கும் தாய். அவளை விடாவிட்டால் பிறகு உன்னைக் காப்பாற்ற யாராலும் முடியாது. விண்ணுலகில் சிறப்புடன் வாழும் தசரதன் மைந்தன் ராமன் வந்தால் நீ தப்ப முடியாது எனவே இப்பொழுதே சீதையை என்னிடம் விட்டு விட்டு, நீ போய் விடு; நான் அவளை முன்பு இருந்த இடத்திலேயே சேர்த்து விடுகிறேன்” என ராவணனிடம் சடாயு கூறினார்.
ராவணன் கேட்கவில்லை. அதன் பிறகு சண்டை நடக்கிறது மிகவும் பயங்கரமான சண்டை சடாயு இடியோசை போன்ற முழக்கத்துடன் பெரிய சிறகுகளை வீசி மோதி, ராவணனின் தலையில் அணிந்த முடிவரிசைகளை நிலத்தில் தள்ளி விட்டு முழக்கம் செய்கிறார். அவனது வீணைக் கொடியை ஒடிக்கிறார் பிறை நிலவு போன்ற பற்களை உடைய ராவணன் தன்மீது பொழிந்த அம்பு மழையைச் சடாயு சிறகாலும், கூர்மையான கால்நகத்தாலும் தடுத்து, ராவணனது வில்லைத் தன் மூக்கால் துண்டு துண்டுகளாக ஆக்கினார். ராவணன் வில்லை வளைப்பதற்குள் விரைந்து வந்து அவன் காதில் உள்ள குண்டலங்களைப் பறித்துச் செல்கிறார்.பெரிய வர பலம் இருந்தும் அறப்போர் செய்யும் பறவை அரசனை அக்கிரமப் போர் செய்யும் ராவணனால் தடுக்க முடியவில்லை. ராவணன் வில் ஒடிகிறது. அவன் தேர்ப்பாகனது தலையைப் பறித்து ராவணன் முகத்தின் மீது எறிகிறார்.
சடாயுவினது மன வலிமையை இராவணன் அறிந்து சினந்து பொன்னால் ஆகிய பெரிய கதையைக் கையில் கொண்டு நெருப்புப்பொறி பறக்க அடித்தான். அதனால் சடாயு பெரிய மலை போல் மண்மீது விழுந்தார். ஆயினும் மறுபடி எழுத்து அவன் குதிரைகளைக்கொன்று சிறகாலும் மூக்காலும் கொத்தி ராவணனை மூர்ச்சையடையச் செய்கிறார்.சற்று நேரத்தில் தெளிந்த ராவணன் சடாயுவைத் தாக்குவதற்கு வேறு ஆயுதங்கள் இல்லாததால் தப்பாமல் தாக்கக்கூடிய சிவன் தந்த சந்திர காசம் எனும் நீண்ட வாளை உறையிலிருந்து எடுத்து சடாயுவை வெட்டி வீழ்த்துகின்றான். இந்த இடத்தில் கம்பன் பாடல் அபாரமானது.
“வலியின் தலை தோற்றிலன்; மாற்ற அருந் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும், வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது; ஆகலின், விண்ணின் வேந்தன்
குலிசம் எறியச் சிறை அற்றது ஓர் குன்றின், வீழ்ந்தான்.’’
சடாயு தன் வலிமையில் ராவணனுக்குத் தோற்றுவிடவில்லை. யாராலும் மாற்ற இயலாத தெய்வத்தன்மை வாய்ந்த சிவன் வாளால் எத்தகு வலிமையுடையவரும் அழிவர். சடாயுவை அழித்தது வாளின் சிறப்பே அன்றி ராவணனின் வலிமை அல்ல என்கிறார். ஜகன்மாதாவுக்காக உயிர் தியாகம் செய்த ஜடாயுவை வைணவத்தில் “பெரிய உடையார்” என்று போற்றுவார்கள். காகாசுரனும் ராவணனும் பிராட்டியிடம் குற்றம் செய்தவர்கள் ஆனால் ஜடாயு பிராட்டிக்காக உயிர்விட்டவர்.
உலகின்படியும் இந்நிகழ்ச்சியை ஒரு படிப்பினையாகக் கொள்ளலாம். தன் கண் எதிரிலேயே ஒரு பெரும் கொடுமையும் தவறும் நிகழ்கின்ற போது கண்ணை மூடிக்கொண்டு போகக்கூடாது. தன்னால் முடிந்த அளவாவது எதிர்க்க வேண்டும் என்பது இக்கதை சமுதாயத்திற்குச் சொல்லும் பாடம், ராவணன் வெட்டி வீழ்த்திய போதும் சடாயு இறக்கவில்லை. ராம இலக்குவருக்குச் செய்தி அறிவிக்க உயிர் தாங்கி இருந்தார். இச்செய்தியை அவர் ராம இலக்குவருக்குக் கூறிய பின்னர்த் தன் உயிரைவிட்டார்.
தந்தையின் நண்பனுக்குத் தசரத ராமன் மாளாத சோகப் புலம்பலுடன் நீர்க் கடன் செய்தான். அப்படி நீர்க்கடன் செய்த தலங்களில் ஒன்றுதான் காஞ்சிக்கு அருகில் உள்ள திருப்புட்குழி என்னும் தலம். இன்னொரு தலம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புள்ளம் பூதங்குடி. இதோ ஆலயம் வந்துவிட்டது. வாருங்கள் தரிசிக்கலாம்.
கோயில் அமைப்பு
திருப்புட்குழி திருத்தலமானது பாலாறு வேகவதி என்னும் இரண்டு நதியின் நடுவிலே அமைந்துள்ளது. ராமாயணத்தில் சடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள் = பறவை + குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். அற்புதமான ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. அருமையான பிராகாரங்கள். விசாலமான மண்டபங்கள்.
நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் மூலவர் காட்சி தருகிறார். விஜயராகவப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு சடங்குகள் செய்யும் பாவனையில் அமர்ந்துள்ளார். வலப்பக்கத்தே இருக்க வேண்டிய தாயார் இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே.
ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகள் செய்யும்போது ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் வலப்புறம் இருந்த ஸ்ரீ தேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவி தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக தலபுராணம் கூறும். எனவேதான் இங்கு தாயார் சந்நதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண் டாள் சந்நதி பெருமாளுக்கு வலது புறமும் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சந்நதியுள்ளது. பெருமாள் திருவீதி உலா செல்லும் போதெல்லாம் ஜடாயுவுக்கு மரியாதை செய்யப்படுகிறது. திருச்சந்நதியின் மண்டபத்துள்ளே முதல் ஆழ்வார்கள், நம்மாழ்வார், மதுர கவியாழ்வார், குலசேகரர் காட்சி தர எதிரே கருடன் பணிவுடன் தரிசனம் தருகின்றார். பிரகாரத்திலே எம்பெருமானார் சந்நதி, சுவாமி தேசிகன் சந்நதிகள் இருக்கின்றன.
கோயிலினுள் வலது பக்கம் சக்கரத்தாழ்வார் தனிச் சந்நிதியில் சேவை சாதிக்கிறார். மூலவருக்கு எதிரே இன்னொரு கருடன். சம்பிரதாய அமைப்பாக மூலவருக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் ஹோம குண்டம் உள்ளது. இந்த இடத்தில்தான் பெருமாள் சாட்சியாக அனைத்து ஹோமங்களும் யாகங்களும் நடைபெறும்.இக்கோயிலில் அதிக அளவிற்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.
இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோயிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோயில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோயில்’ என்றும் பலவாறு குறிப்பிடுகின்றன. இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் துறந்தானாம். இவனது உறுதியையும் பக்தியையும் போற்றும் வகையில் பெருமாள் 8-ஆம் உற்சவத்தன்று அத்தச்சனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.
வறுத்த பயறு முளைவிக்கும் தாயார்
தாயாருக்கு மரகதவல்லி என்னும் திருநாமம். இவருக்குத் தனிச்சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்’என்று அழைக்கிறார்கள். பல பக்தர்கள் குழந்தை பேறு கிடைக்காமல் வேண்டும் போது தாயார் சந்தான லட்சுமியாக அவர்களுக்கு குழந்தைப் பேற்றினை அருள்கிறாள்.
ஜடாயு தீர்த்தத்தில் நீராடி, பெண்கள் இரவில் மடியில் வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க வேண்டும். மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம். அதற்காக நிறைய தம்பதிகள் வருகின்றனர். நாம் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன தம்பதிகளும் இந்தத் தலத்தில் வந்துதான் தங்கள் கோரிக்கை நிறைவேறப் பெற்றனர்.
ஆலய விழாக்கள்
புனர்பூசம், உத்திரம், திருவாதிரை, திருவோணம், மூலம், அமாவாசை, கடை வெள்ளி, என வரிசையாக உற்சவ நாள்கள் உண்டு. திருவாடிப்பூரத்து ஆண்டாள் அவதார திருநாள் உற்சவமும், ஆவணியில் பவித் ரோத்சவமும் புரட்டாசியில் நவராத்திரி திருநாள் உற்சவமும், திருக்கார்த் திகையில் தீப உற்சவம், மார்கழியில் திருப்பாவை மற்றும் அத்யயன உற்சவமும்,தை அமாவாசையில் தெப்ப உற்சவமும் நடைபெறும். சித்திரை மாதத்தில் 10 நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. ராமன் ஈமக்கிரியை செய்த தல விசேஷம் இருப்பதால் இங்குள்ள தீர்த்தத்தில் தர்ப்பணங்கள் செய்ய பித்ருக்கள் மகிழ்வார்கள். திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகும்.
திருமங்கை ஆழ்வார் இத்தலம் குறித்த மங்களாசாசன பாசுரம் இது
“அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர்
கழியுமால் என்னுள்ளம் என்னும்
புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும்
போதுமோ நீர்மலைக் கென்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக்
கொடியிடை நெடுமழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக் கென்னினைந்
திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.’’
– (பெரிய திருமொழி 2-7-8)
1. சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பாதையில் பாலு செட்டி சத்திரம் என்ற ஒரு பேருந்து நிறுத்தம் இருக்கிறது அங்கே இறங்கினால் கொஞ்ச தூரம் தான் கோயில். காஞ்சிபுரத்தில் இருந்தும் செல்லலாம். ஆட்டோ கார் வசதிகள் உண்டு.
2. சுவாமி ராமானுஜர் இந்த திவ்ய தேசத்தில் தான் யாதவ பிரகாசர் என்ற அத்வைதியிடம் ஆரம்ப பாடங்களைப் படித்தார். ராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. ராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோயிலில் உள்ளது.
3. கோயில் கருவறை வாசலில் மேலே நிறைய மணிகள் தொங்க விடப்பட்டுள்ளன. பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர், பெருமாளை நினைத்து மணி கட்டி வேண்டுவர்.
4. குடும்பப் பிரச்னை, தாம்பத்ய பிரச்னை, சொத்து சுகம் சம்பந்தமான பிரச்சினை தீர்வதற்கும், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தால் அந்தப் பிரச்னை சாதகமாக மாறி பாக்கியம் பெறுவதற்கும் இத்தலம் வருகின்றனர்.
5. பின்பழகிய பெருமாள் ஜீயர் என்ற ஆச்சாரியரின் அவதாரத் தலமாகும். இந்த ஆச்சாரியார் நம்பிள்ளையின் சீடர்.
6. விஜயராகப் பெருமாளுக்கு வடமொழியில் சமர புங்கவன் என்று பெயர் இதைத்தான் போர்ஏறு தமிழ் படுத்தினார் ஆழ்வார்.
7. தசரதன் இறந்தபோது தந்தையான அவருக்கு மகன் என்கிற முறையில் ராமரால் ஈமச் சடங்குகள் செய்ய முடியவில்லை. சொந்தத் தந்தை தசரதனுக்கும் கிடைக்காத பேறு இங்கு பறவையான ஜடாயுவுக்குக் கிடைத்தது.
8. ஜடாயுவுக்கு ஈமச் சடங்குகள் செய்துவிட்ட தலம் என்பதால் திருமதிளுக்கு வெளியே தான் கொடிமரம் பலிபீடம் அமைந்திருக்கிறது.
9. தீர்த்தம் ஜடாயு தீர்த்தம், விமானம் வீர விஜயகோடி விமானம், தல மரம் பாதிரி.
10. தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் 8 மணி வரை.
முனைவர் ஸ்ரீ ராம்