சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே 2025-26ம் கல்வியாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவானது தொடங்கி நடந்து வருகிறது. மருத்துவத் துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு, எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்ந்து படிக்க இடம் கிடைக்காத பட்சத்தில், பாராமெடிக்கல் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளை தேர்ந்தெடுப்பர். அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் துணை மருத்துவ பட்டப் படிப்புகளில் (Para Medical Degree Courses) மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் பி-பார்ம், பிபிடி, பிஎஸ்சி நர்சிங், ரேடியோகிராபி இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பர்பியூஷன் டெக்னாலஜி, மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, பிசிசியன் அசிட்டெண்ட், ஆக்சிடெண்ட் மற்றும் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, ரெஸ்பையரேட்டரி தெரபி, நியோரோ எலக்ட்ரோ பிசியாலஜி, கிளினிக்கல் நியூட்ரிஷன் படிப்புகள் மற்றும் பிஆப்டம், பிஓடி படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் ஜூன் 17 முதல் (நேற்று) ஜூலை 7ம் தேதிவரை www.tnmedicalselection.org என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி பெற்றோர் பட்டியல் மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடுவது குறித்தும், தற்காலிக ஒதுக்கீட்டு இடங்கள் குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும். சேர்க்கை குறித்த தேதி ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும். மேலும், இதுதொடர்பான தகவல் தொகுப்பையும் இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் அனைத்து அசல் சான்றுகளுடன் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு நேரடியாக சென்று அங்குள்ள இணைய தள உதவி மையத்தை அணுகி இணையதள விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம்.