பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நின்றிருந்த கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் விக்ரம்பாய். தொழிலதிபரான இவருடன் நீலா, ரமேஷ் பர்மா மற்றும் 2 குழந்தைகள் உட்பட 6 பேரும், நண்பர்களான மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவு பகுதியை சேர்ந்த ரிஷப், ரூபாலி ஆகியோரும், ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றனர்.
பின்னர், காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். நேற்று மாலை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, பரமத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு சாலையோரம் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் இருந்து, நாமக்கல் முட்டை கம்பெனிக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, எதிர்பாராதவிதமாக காரின் பின்பகுதியில் மோதியது. மேலும், அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீதும் பயங்கரமாக மோதியது.
இதில் ரிஷப், ரூபாலி ஆகியோர் துடிதுடித்து உயிரிழந்தனர். லாரி மோதிய வேகத்தில், அருகில் உள்ள 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. தொடர்ந்து கன்டெய்னர் லாரியும் கார் மீது விழுந்தது. இதில், கார் நொறுங்கியது. காருக்குள் இருந்த இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவலின்பேரில், ஜேடர்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று, அப்பகுதி மக்களுடன் சேர்ந்து நீண்டநேர போராட்டத்துக்கு பின்பு கிரேன், பொக்லைன் கொண்டு இருவரையும் உயிருடன் மீட்டனர். பின்னர், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த, தர்ஜெயின் (8), பெலிட்டி நன் (13), ரவீந்திர லுங்கர், விக்ரம் பாய், நீலா, ரமேஷ் பர்மா ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை ஓட்டி வந்த எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நிதீஷ் (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.