சென்னை: உடன் பிறப்பே வா என்ற நிகழ்ச்சி மூலம் ‘ஒன் டூ ஒன்’ மூலம் பரமத்தி வேலூர், கவுண்டபாளையம், பரமக்குடி தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். மனம் விட்டு பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தொகுதி பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உள்பட்ட தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரைவாக, ஒன் டூ ஒன் பேசுவோம். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொறுப்பை நான் வழங்கியிருக்கிறேன். அதை சிறப்பாக-எந்த விமர்சனமும் இல்லாமல், செய்து காட்டினால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது” என்றார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி திமுக நிர்வாகிளுடனான சந்திப்பு தொகுதி வாரியாக கடந்த 13ம் தேதி தொடங்கியது. “உடன் பிறப்பே வா” என்ற பெயரில் இந்த சந்திப்பு தொடங்கியுள்ளது. முதல் நாளான கடந்த 13ம் தேதி அன்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் நேற்று பரமத்தி வேலூர், கவுண்டபாளையம், பரமக்குடி தொகுதி நிர்வாகிகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இதில் 3 தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் தொகுதியின் பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர், அமைச்சர்தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து, ஏற்கெனவே எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில், தனித்தனியாக தயாரிக்கப்பட்ட கோப்புகளை வைத்து, அதில் உள்ள விவரங்களின் படி நிர்வாகிகளிடம் விவரங்களை பெற்றார். தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்பதையும் அறிந்து கொண்டார். மக்கள் திமுக ஆட்சியை பற்றி என்ன நினைக்கிறார்கள்.
திமுக அரசு செய்துள்ள மக்கள் நலன் திட்டங்கள் குறித்து மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள். மக்கள் இன்னும் என்ன அரசிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறார்கள் என்று கருத்துக்களை கேட்டதாக கூறப்படுகிறது. வருகிற தேர்தலில் இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்தல் பணியாற்ற வேண்டும். கூட்டணி கட்சிகள் வெற்றி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் செயல் திட்டங்கள் குறித்து நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார். நிர்வாகிகளிடம் சகஜமாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார். தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஓன் டூ ஓன் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருவதால் திமுகவினர் மகிழச்சியில் உள்ளனர். தொடர்ந்து வரும் 20ம் தேதி வரை தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.