பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 17வது பாராலிம்பிக் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகளை பதக்க வேட்டையில் இறங்கி உள்ளனர். மகளிருக்கான 200 மீட்டர் டி-35 ஓட்டப்பந்தய இறுதிசுற்று நேற்றிரவு நடந்தது. இதில், இந்திய வீராங்கனை பிரீத்தி பால் பந்தய தூரத்தை 30.01 விநாடிகளில் எட்டி, தனது தனிப்பட்ட புதிய சாதனையை பதிவு செய்து 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். சீனாவின் சியா சோவ் 28.15 விநாடிகளில் கடந்து தங்கமும், கியான்கியான் குவோ 29.09 விநாடிகளில் கடந்து வெள்ளியும் வென்றனர். இவர்கள் இருவரும் தான் 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம், வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.
நடப்பு தொடரில் பிரீத்தி பாலுக்கு இது 2வது பதக்கமாகும். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மகளிருக்கான டி35 100மீ ஓட்டப் பந்தயத்திலும் பிரீத்தி பால் வெண்கலம் வென்றிருந்தார். இதன் மூலம், பாராலிம்பிக்கில், டிராக் & ஃபீல்ட் போட்டியில், 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற வரலாற்றுச் சிறப்பை பிரீத்தி பால் பெற்றுள்ளார். ஆடவருக்கான டி47 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத்குமார் வெள்ளி வென்று அசத்தினார். 2.04 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார். முன்னதாக டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கிலும், நிஷாத் குமார் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சேர்ந்த டவுன்செண்ட் ராபர்ட்ஸ் 2.12 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்ற இருவருக்கும் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று பேட்மிண்டன், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், வில்வில்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் களம் இறங்குவதால் பதக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தியா தற்போது வரை ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களுடன், 27வது இடத்தில் உள்ளது. சீனா 33 தங்கம் உட்பட 71 பதக்கங்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 23 தங்கம் உட்பட 43 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், 8 தங்கம் உட்பட 27 பதக்கங்களுடன் அமெரிக்கா 3வது இடத்திலும் உள்ளது.