பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான வில்வித்தை பைனலில் போலந்தின் லூகாஸ் சிசெக் உடன் மோதிய இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் 6-0 (28-24, 28-27, 29-25) என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதன்மூலம் பாராலிம்பிக், ஒலிம்பிக் வில்வித்தையில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார். ஏற்கனவே டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) வெண்கலம் வென்றிருந்தார். இந்த முறை இந்தியாவுக்கு கிடைத்த 4வது தங்கம் ஆகும்.
மேலும் ஆடவர் கிளப் எறிதல் போட்டியில் தங்கம், -வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆடவர் கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தராம்பீர் 34.92மீ தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா 2வது இடம்பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா பங்கேற்றார். இலக்கை 12.17 வினாடியில் அடைந்த சிம்ரன், தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். ஆசிய பாரா விளையாட்டில் 100, 200 மீ., ஓட்டத்தில் வெள்ளிபதக்கம் வென்ற சிம்ரன், உலக சாம்பியன்ஷிப் 200 மீ, ஓட்டத்தில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாராலிம்பிக்கில் 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் இந்தியா 13வது இடத்திற்கு முன்னேறியது.