பாரிஸ்: வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 2024 பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை எட்டு பதக்கங்களை வென்றுள்ளது. ஒரு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது. இந்த எட்டு பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 30வது இடத்தில் உள்ளது. இன்று மேலும் பல பதக்கப் போட்டிகள் இருக்கும் நிலையில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவிக்க வாய்ப்பு உள்ளது.
2024 பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரார் யோகேஷ் கதுனியா வட்டு எறிதல் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா எட்டாவது பதக்கம் வென்றது. வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் அவர் தனது முதல் முயற்சியிலேயே 42.22 மீட்டர் தூரம் வீசி தனது சிறந்த தூரத்தை பதிவு செய்தார்.
அடுத்த ஐந்து முயற்சிகளில் அவர் 41.50 மீட்டர், 41.55 மீட்டர், 40.33 மீட்டர், 40.89 மீட்டர், மற்றும் 39.68 மீட்டர் தூரம் மட்டுமே வீசினார். தனது முதல் முயற்சியில் அவர் வீசிய 42.22 மீட்டர் வீச்சு அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது.
பிரேசில் நாட்டை சேர்ந்த கிளாடினி பட்டிஸ்டா வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் 46.86 மீட்டர் தூரம் வீசி புதிய பாராலிம்பிக் சாதனை படைத்தார். அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். கிரீஸ் நாட்டை சேர்ந்த கோன்ஸ்டன்டினோஸ் ஜோனிஸ் 41.32 மீட்டர் தூரம் வீசி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.