சென்னை: பாராலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்தியா சார்பாக 84 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்திய அணி 4 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்றது. பாராலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இந்தியா சார்பாக தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த துளசிமதி வெள்ளி பதக்கம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனுஷா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். அதேபோல் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியைச் சேர்ந்த நித்திய ஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றார். பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற 3 வீராங்கனைகளும் நேற்று முன்தினம் இரவு பாரிஸ் நகரில் இருந்து டெல்லி வழியாக தனியார் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு வெண்கலம் பதக்கம் வென்ற மனிஷா அளித்த பேட்டி: பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக்கில் பங்கேற்பது எனது கனவாக இருந்தது. போட்டிகளில் பங்கேற்க அதிக பணம் செலவானபோதும், பெற்றோர் கஷ்டங்களுக்கு இடையே எனக்காக பணம் செலவு செய்து அனுப்பினர்.
வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதி பேட்டி: சிறு வயதில் எனது தந்தை பேட் பிடிக்க கற்று தந்த காலம் முதலே, ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற கனவு இருந்தது. வெள்ளிப் பதக்கம் வென்று, நான் இந்த இடம் வருவதற்கு தந்தை பல போராட்டங்களை கடந்து கஷ்டபட்டார். பயிற்சியால் பாதிக்கப்பட்ட எனது பட்டப்படிப்பை இடையூறின்றி தொடர அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் உதவினர். அவர்களுக்கும் நன்றி.
வெண்கல பதக்கம் வென்ற நித்திய ஸ்ரீ பேட்டி: பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வெற்றிக்கு உதவிய பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறினர்.