சென்னை: பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ் வெண்கலப்பதக்கத்தை வென்றார். இந்த நிலையில் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் SH6 பிரிவில் நித்யஸ்ரீ சிவன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024ல் பாரா பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் SH6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு வாழ்த்துகள். பாரா ஒலிம்பிக்கில் பாரா பேட்மிண்டனில் இந்தியா வென்ற ஐந்து பதக்கங்களில், மூன்று எங்கள் SDAT ஆதரவுடன் தமிழக வீரர்களால் பெறப்பட்டது. ELITE,MIMS மற்றும் TNCF போன்ற திட்டங்கள். எங்கள் பாரா தடகள வீரர்களின் வரலாற்று சாதனைகளால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மேலும் அவர்கள் எதிர்கால போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.