மூணாறு : மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணையில் பாராகிளைடிங் சோதனை ஓட்டம் நடைபெற்றது.தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம், மூணாறுக்கு வருகை தரும் சாகச சுற்றுலாப்பயணிகளுக்கு சுற்றுலா துறையின் சார்பில் வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் அரசு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறது. இந்நிலையில் மூணாறு அருகே உள்ள மாட்டுப்பட்டி அணையில் ஹைடல் சுற்றுலாத்துறையினர் பாராகிளைடிங் என்ற சாகச விளையாட்டை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாட்டுப்பட்டி அணையில் பாராகிளைடிங் சோதனை நடத்தப்பட்டது.
இன்னும் 2 நாட்கள் பல்வேறு காலநிலைகளில் சோதனை நடத்தப்படவுள்ளது. அதன்பிறகு அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாக இருந்தால் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், இடுக்கி மாவட்டத்தில் குறிப்பாக நீர்நிலையில் பாராகிளைடிங் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்று ஹைடல் சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.