சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப்பதிவு: தனிச்சிறப்பான மூன்று விளையாட்டு வீரர்கள். உத்வேகம் அளிக்கும் மூன்று தங்கக் கதைகள். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 16 வயதே ஆன வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் ஏற்கனவே பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவிலும் கலப்பு காம்பவுண்ட் பிரிவிலும் தங்கம் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி என மூன்று பதக்கங்களை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டின் பெருமை தர்மராஜ் சோலைராஜ் ஆண்கள் நீளம் தாண்டுதல் ஜி-64 பிரிவில் 6.80 மீட்டர் தாண்டி புதிய ஆசிய சாதனையையும், பாரா விளையாட்டு சாதனையையும் படைத்துள்ளார். மகளிர் பேட்மிண்டனில் SU5 பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி பாராட்டுக்குரியவராகிறார். இந்த மூன்று வியத்தகு சாதனைகளும் நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் ஒளிவிளக்குகளாக திகழ்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.