நாகர்கோவில்: குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வன் (60). நாகர்கோவில் டதி பள்ளி அருகே பேலஸ் ரோட்டில் டெய்லர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது கடைக்குள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வடசேரி போலீசார் நடத்திய விசாரணையில், செல்வனை கொலை செய்தது தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அடுத்த கோவில்பத்து பகுதியை சேர்ந்த சந்திரமணி (37) என்பது தெரிய வந்தது.
நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் அவரை நேற்று காலை தனிப்படை போலீசார் மடக்கினர். விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து சந்திரமணி கூறுகையில், ‘நான் நாகர்கோவிலில் உள்ள பிரபல ஓட்டலில் செப் (தலைமை சமையலர்) ஆக வேலை பார்த்து வருகிறேன்.
சமீபத்தில் புதிய பேன்ட் ஒன்று எடுத்தேன். அது எனக்கு பெரிதாக இருந்தது. அதை சரி செய்து தைத்து தருமாறு டெய்லர் செல்வனிடம் கொடுத்தேன். அவர் சரியாக தைத்து தரவில்லை. இது குறித்து கடைக்கு சென்று கேட்டபோது செல்வன் என்னை திட்டினார். இதனால் ஆத்திரத்தில் அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து அவரது முதுகு, தலையில் குத்தி விட்டு சென்று விட்டேன். அவர் இறந்தது தெரியாது’ என கூறி உள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.