கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தை சேர்ந்தவர் கவ்சல்யா 80 வயதான இந்த மூதாட்டி தனது மகன் ஷங்கருடன் வசித்து வருகிறார். மூதாட்டி கவ்சல்யா தினந்தோறும் காலை, மாலை இரு வேலைகளிலும் புலவலூர் சாலையில் தனியாக நடைப்பயிற்சி செய்வது வழக்கம் அது போல் நேற்று மாலை மூதாட்டி கவ்சல்யா வழக்கம் போல் புலவலூர் சாலையில் நடைப்பயிற்சி செய்யும் போது பாதை ஓரத்தில் அமர்ந்து மதுகுடித்து கொண்டு அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் மூதாட்டியை வலுக்கட்டாயமாக சவுக்கு தோப்புக்குள் இழுத்து சென்று வாயில் மண்ணை கொட்டி சத்தம்போடாமல் இருக்க செய்துள்ளனர்.
பின்னர் அவர் அணிந்திருந்த ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் மூதாட்டி அணிந்திருந்த நகைகளையும் எடுத்து சென்றனர். கடும் பாதிப்புக்குள்ளான மூதாட்டி மயங்கிய நிலையில் சவுக்கு தோப்பில் கிடந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மூதாட்டியை மீட்டு கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி கொண்டிருந்தனர்.
அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய சுந்திர வேல் என்பவர் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் பதுங்கி இருந்த போது போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு சுந்தரவேல் தப்பியோட முயற்சி செய்தார். அப்போது பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுட்டதில் சுந்தரவேல் காயமடைந்துள்ளார். காலில் குண்டு காயங்களுடன் தற்போது பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சுந்தரவேல் தாக்கியதில் 2 காவலர்கள் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.