பண்ருட்டி: கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது ஆட்டோ மீது கார் மோதி சென்னை மயிலாப்பூரை சேர்ந்த அதிமுக மகளிரணி நிர்வாகி உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்தவர் கவுரி(56), மயிலாப்பூர் மேற்கு பகுதி அதிமுக மகளிரணி 123வது வட்ட பொருளாளர். இவர் உறவினரான அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (65), லில்லி(52) ஆகியோருடன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சூரக்குப்பத்தில் உள்ள உறவினர் அஞ்சாபுலி(40) என்பவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து நேற்று முன்தினம் கவுரி, பரமேஸ்வரி, லில்லி, அஞ்சாபுலி மற்றும் உறவினர்களான பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த நிலவழகி(45), ராமச்சந்திரன்(63) ஆகியோருடன் முத்தாண்டிகுப்பம் கருப்புசாமி கோயிலுக்கு சென்று இரவு பூஜையில் பங்கேற்று விட்டு, நேற்று அதிகாலை ஆட்டோவில் பண்ருட்டி திரும்பி கொண்டிருந்தனர். பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழகம் அருகே, பின்னால் வந்த காரின் டயர் திடீரென வெடித்ததில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவில் சென்ற கவுரி, அஞ்சாபுலி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆட்டோ டிரைவர் மணிகண்டன்(35) மற்றும் நிலவழகி, ராமச்சந்திரன், லில்லி, பரமேஸ்வரி ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.