*கடலூர் எஸ்பி நேரில் விசாரணை
பண்ருட்டி : பண்ருட்டி அருகே பஸ் நிறுத்தத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று மாலை சூட்கேஸ் ஒன்று கிடந்தது.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியோடு பார்த்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் கூட்டம் கூடியது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் நந்தகுமார், எஸ்.ஐ.வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து கடலூர் எஸ்பி ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பி ஜெயக்குமார், வெடிபொருட்களை கண்டுபிடிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்ற போலீஸ் ஏட்டு அன்பரசனும் சம்பவ இடத்துக்கு வந்தார். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சூட்கேசை சோதனை செய்தனர்.
அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் எந்த பொருட்களும் இன்றி காலியாக கிடந்தது. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.