சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என ஓபிஎஸ்.க்கு எடப்பாடி பழனிசாமி சூசகமாக பதில் அளித்துள்ளார். ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா என்றும அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுக்க தொடக்கி விட்டன.
குறிப்பாக, கடந்த காலங்களில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு வெடித்த பூகம்பத்தால் கட்சியில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு தரப்பினராக பிரிந்து பின்னர் வழக்குகள், பொதுக்குழு தீர்மானம், கட்சி தலைமை அலுவலகம் என அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்ததால் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். துரோகி என முத்திரை குத்தப்பட்டார். ஆனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் அதிமுகவில் தனி அணியாக இயங்கி வருகிறார்.
மீண்டும் அனைவரும் கட்சியில் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடிக்கு பல வழிகளில் நெருக்கடி அளித்து வருகிறார். அதேபோல், சசிகலா ஆதரவாளர்களோ அதிமுகவிற்கு மீண்டும் சசிகலாவே தலைமையேற்க வேண்டும் என போஸ்டர் யுத்தம் வருகின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய டிடிவி தினகரன், அதிமுகவை எடப்பாடி கைப்பற்றியதால் “துரோகி” என கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதேபோல், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியை புறக்கணித்ததில் இருந்து மேலும் பூகம்பம் வெடிக்கத் தொடங்கியது. இந்நிலையில் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
‘‘இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? அதிமுக தலைமையிலான சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. ஜெயலலிதாவின் சூளுரையை செயல்படுத்தி அதிமுக ஆட்சியை மலரச் செய்வோம். வியத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கு ஏற்ப அயராது உழைப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.