புதுடெல்லி: கடந்த 2001-06ம் ஆண்டில், தமிழக வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த போது ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ல் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம், குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அனைவரையும் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுவித்திருந்தது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்வது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தார் தொடர்புடைய சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற, சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது சட்டவிரோதமானது ஆகும் எனக்கூறி அந்த உத்தரவை ரத்து செய்தார்.
மேலும் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு எதிராகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தார் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.ராய் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அனத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர் அடுத்த நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என்று நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.