சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் திருச்சி முக்கொம்பு பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கட்டிய அணை தமிழக ஆற்றுப் பாசன வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. பென்னிகுக் முல்லைப் பெரியாற்றில் அணை கட்டுவதற்காக அடைந்த சிரமங்களைப் போலவே இந்த சர் ஆர்தர் காட்டனும் கடுமையான சிரமங்களை அடைந்து வந்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேய அரசு அணைக் கட்டுமானத்திற்காக ஒரு நிதி ஒதுக்க யோசித்தபோது சர் ஆர்தர் காட்டன் தனது சொந்த முயற்சியில் நிதியைத் திரட்டி அணையைக் கட்டி முடித்ததாக ஒரு தகவல் உண்டு. இத்தகைய முக்கொம்பு அணையால் இப்போது அந்தப் பகுதி மட்டுமின்றி கொள்ளிடம், காவிரி ஆறு பாயும் பல பகுதிகள் வளம் கண்டு வருகின்றன. இத்தகைய முக்கொம்பு அணையின் நீர் பாயும் அருகில் உள்ள பகுதிகளில் விவசாயம் செழிப்பாக நடைபெற்றுவருகிறது. குறிப்பாக எட்டரை, வயலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலவித பயிர்கள் பசுமை கட்டி விளைந்து நிற்கின்றன. இந்தப் பகுதிகளில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களைப்போலவே மலர்வகைப் பயிர்களும் சிறப்பாக சாகுபடி செய்யப்படுகின்றன. மல்லி, முல்லை என தொடரும் அந்த வரிசையில் பன்னீர் ரோஜாவும் சேர்ந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு உதிராத தன்மை, மாலை கட்டுவதற்கு தோதான வாகு உள்ளிட்ட காரணங்களால் இப்பகுதி விவசாயிகள் இந்த மலர் விரும்பி சாகுபடி செய்யப்படுகிறது. எட்டரை கிராமத்திற்கு அருகில் உள்ள போசம்பட்டி கணேசபுரம் என்ற பகுதி பன்னீர் ரோஜாத் தோட்டங்கள் நிறைந்த விசேஷ பூமியாக காட்சியளிக்கிறது. இந்த ஊரில் தனது அரை ஏக்கர் நிலத்தில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யும் சேகர் என்ற விவசாயியைச் சந்தித்தோம்.
“திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு நாங்கள் தினமும் செல்வோம். அப்படி தினமும் சென்று வருமானம் பார்க்க மலர் வகைகள் கை கொடுக்கின்றன. இதனால்தான் இந்தப் பகுதியில் நாங்கள் மலர் வகைகளைத் தொடர்ச்சியாக செய்கிறோம். மலர் வகைகளுக்கு எப்போதும் டிமாண்ட் இருப்பதும் அதற்கு ஒரு காரணம். எனக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 3 ஏக்கரில் குண்டுமல்லி பயிரிட்டு இருக்கிறேன். பன்னீர் ரோஸை அரை ஏக்கரில் வைத்திருக்கிறேன். மாலைக்கு கட்டப்படும் மாசி பச்சையை 40 குழியிலும், பொரியலுக்குப் பயன்படும் தட்டைக்காயை முக்கால் ஏக்கரிலும் பயிர் செய்திருக்கிறேன். முன்பு நாங்கள் பட்டுக்கோட்டை பன்னீர் ரோஸை பயிர் செய்து பார்த்தோம். அதைக் காலையில் பறித்தால் மாலையில் உதிர்ந்துவிடும். இதனால் விற்பதற்கு சிரமப்பட்டோம். அதற்கு மாற்றாக ஓசூர் ரோஸை நடவு செய்ய ஆரம்பித்தோம். இதைப் பறித்து வைத்தால் 4 நாட்கள் கூட உதிராமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்’’ என்று சரசரவென பேச ஆரம்பித்த சேகரிடம், பன்னீர் ரோஸை சாகுபடி செய்யும் விவரம் குறித்து கேட்டோம்.“பன்னீர் ரோஸை நடவு செய்ய நிலத்தை நன்றாக உழ வேண்டும். நாங்கள் பெரும்பாலும் மாட்டு ஏரோ, டிராக்டரோ பயன்படுத்துவதில்லை. சிறிய அளவிலான கை டிராக்டரைத்தான் பயன்படுத்துகிறோம். அதை வைத்து நிலத்தை நன்றாக உழவு செய்து 7 அடிக்கு ஒரு பார் அமைப்போம். ஒரு பாருக்கும் மற்றொரு பாருக்கும் கண்டிப்பாக இந்தளவு இடைவெளி விட வேண்டும். அப்போதுதான் நாம் செடிகளின் வரிசைக்கு இடையே சென்று பராமரிப்புப் பணி மற்றும் அறுவடைப்பணிகளை செய்யமுடியும்.
அந்த பார்களில் 3 அடி இடைவெளிகளில் ரோஜா நாற்றுகளை நடுவோம். நடும்போது மண்வெட்டியால் ஒரு அடி ஆழத்திற்கு குழியெடுத்து அதில் செடிகளை வைத்து நடுவோம். உடனே உயிர்த்தண்ணீர் பாய்ச்சுவோம். பின்பு அந்த பார்களில் ரோஜா செடிகளுக்கு இடையில் மிளகாய் நாற்றுகளை நடுவோம். நட்ட 30வது நாளில் மானோகுரோட்டபாஸ் மருந்தை டேங்குக்கு 35 மிலி, டான் மருந்தை 35 மிலி எடுத்து சார்பின் பவுடர் என்ற பவுடருடன் கலந்து செடிகளுக்கு ஸ்பிரே செய்வோம். இந்தக் கலவையை வாரம் ஒருமுறை தெளிப்போம். இவ்வாறு தெளிக்கும்போது பூச்சிகள் கட்டுப்படும். 90வது நாளில் செடிகளில் வேர்கள் பிடிக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் பாக்டம்பாஸ் 100 கிராம், டிஏபி 100 கிராம் கலந்து செடியைச் சுற்றி கொத்துப்புழுதியில் இட்டு பாசனம் செய்வோம். இதேபோல் மாதம் ஒருமுறை உரமிடுவோம். நாட்கள் செல்ல செல்ல உரத்தின் அளவைக் கூடுதலாக்கிக் கொடுப்போம். 15 நாளுக்கு ஒருமுறை களையெடுப்பது அவசியம். உரமிடும்போதும் களையெடுப்பதை வழக்கமாக செய்வோம். களையெடுத்துவிட்டுத்தான் உரத்தைப் போட வேண்டும். அப்போதுதான் உரங்களின் சத்து ரோஜா செடிகளுக்கு முழுமையாக சேரும். 90வது நாளில் இருந்து செடிகளில் இருந்து பூக்கள் வர ஆரம்பிக்கும். அதில் இருந்து தினமும் பூக்களைப் பறிக்கலாம். ஆரம்பத்தில் ஒருநாளைக்கு 3 முதல் 4 கிலோ வரை பூக்கள் மகசூலாக கிடைக்கும். 6 மாதத்தில் ஒரு நாளைக்கு 10 முதல் 40 கிலோ வரை பூக்கள் பறிக்கலாம். அவ்வப்போது பூக்களின் அளவு அதிகமாகவும், குறைவாகவும் கிடைக்கும்.
10 நாளுக்கு கூடும். 10 நாளுக்கு குறையும். நாம் முறையாக ஊட்டம் கொடுத்து மகசூலைப் பெருக்கம் அடையச் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் பூக்களின் அளவு குறையும். பூச்சித்தாக்குதல் அதிகரிக்கும். அந்த சமயத்தில் தேவையான மருந்துகளை வாங்கித் தெளிக்க வேண்டும். எப்படி பார்த்தாலும் மாதத்திற்கு 500 முதல் 700 கிலோ வரை பூக்கள் மகசூலாக கிடைக்கும். தினசரி கிடைக்கும் பூக்களை திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு எடுத்துசென்று விற்பனை செய்வோம். அங்குள்ள வியாபாரிகள் பூக்களின் விலைக்கேற்ப தொகை வழங்குவார்கள். ஒரு கிலோ பூவுக்கு ரூ.20 முதல் 200 வரை விலை கிடைக்கும். இதற்கு நிலையான விலை இல்லை. அவ்வப்போது ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும். சீசன் காலங்களின் நல்ல விலை கிடைக்கும். எப்படி பார்த்தாலும் இந்த அரை ஏக்கர் நிலத்தில் இருந்து வருடத்திற்கு ரூ.ஒன்றரை லட்சம் பூக்கள் மூலம் வருமானம் பார்க்கலாம். இதில் செலவு அதிகம். ரூ.1 லட்சம் வரை கூட செலவாகும். அதுபோக ரூ.50 ஆயிரத்தை லாபமாக பார்க்கலாம்.செலவைக் குறைத்தால் லாபத்தை அதிகமாக பார்க்கலாம்’’ என்கிறார்.
பன்னீர் ரோஜாக்கள் பொதுவாக பூஜையில் வைத்து வழிபடவும், மாலைக்காகவும் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. பூஜைக்கும், மாலைக்கும் வேறு எந்த மலர்களை வைத்தாலும் பன்னீர் ரோஜா வைத்தால் அதற்கு தனி மவுசுதான்.
ரோஜாவின் வருமானம் ஒரு பக்கம் இருக்க, ரோஜாச் செடிகளுக்கு இடையே நடவு செய்யப்படும் பச்சை மிளகாய்ச் செடிகளில் இருந்தும் ஒரு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. ஒருமுறை நடவு செய்தால் அதில் இருந்து ரூ.20 வருமானம் பார்க்கலாம் என்கிறார்கள் போசம்பட்டி விவசாயிகள்.