பக்த விஜயம் 1
பகவான் பாண்டுரங்கன், பண்டரிபுரம் வந்த வரலாற்றில் இருந்து, ‘மஹா பக்த விஜயம்’ தொடங்குகிறது.
அன்னப் பிரம்மம் – ஜெகநாதம்.
பூரணப் பிரம்மம் – திருப்பதி.
தாரகப் பிரம்மம் – வாரணாசி.
நாதப் பிரம்மம் – பண்டரிபுரம்.
– என்பார்கள்.
அப்படிப்பட்ட பண்டரிபுரம், சந்திர பாகா நதிக்கும், திண்டிர வனத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. அங்கு புண்டரீகன் என்பவன் வாழ்ந்து வந்தான்; தாய் – தந்தையர்களை வணங்கி நடந்தவன்; சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் திறமைசாலியாக இருந்தான். மனம் மகிழ்ந்த பெற்றோர்கள், தகுந்த வயதில் புண்டரீகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். சில நாட்கள் ஆயின.
புண்டரீகனின் மனைவி புகார்ப் பட்டியல் சொல்லத் தொடங்கினாள்; ‘‘சுவாமி! உங்கள் பெற்றோர்கள் எந்த நேரமும் என்மீது ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். என்னைப் பார்த்தாலே அவர்களுக்கு வயிறு எரிகிறது. அதனால் இன்று முதல் நான் அவர்களுடன் பேச மாட்டேன். எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன். அவர்கள் இருவரையும் வேறு எங்கேயாவது கொண்டுபோய், குடி வைத்துவிடுங்கள்! இல்லாவிட்டால் நான் உங்களுடன் இருக்க மாட்டேன்.
என் பெற்றோர்களிடம் போய் விடுவேன்’’ என்று சொல்லி எச்சரித்தாள்.புண்டரீகன், மனைவி மீது மிகுந்த மோகம் கொண்டவன். ஆதலால் அவன், மனைவி சொல்லை மீற முடியாமல் அவள் எண்ணப்படியே செயல்பட்டான். உடனே தன் பெற்றோர்களை அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றிய புண்டரீகன், அவர்களை வேறொரு வீட்டில் குடிவைத்து ஏதோ ஓரளவிற்குப் பாதுகாத்தான். மனைவியின் தவறான வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தொடங்கிய புண்டரீகன், எந்நேரமும் மனைவியைப் புகழ்ந்து கொண்டேயிருந்தான்.
அவளுடைய விருப்பத்தை மேலும் பெறுவதற்காக, தன் பெற்றோர்களை மிகவும் இகழ்ந்தான். மனைவியின் மோகத்தால், அந்தண குலத்திற்கு உரிய கடமைகளை நிறுத்தினான். எந்த விதத்திலும் தர்மம் செய்யாதவனாக இருந்ததோடு, மறந்து போய்க்கூடப் பகவான் திருநாமத்தை உச்சரிக்காதவனாக இருந்தான்.கூடவே, சாதுக்களைக் கண்டால், ஏசிப் பேசுவதும்; விலைமாதர் வலையில் மூழ்குவதும்; அடுத்தவர் செய்யும் தர்மத்தை விலக்குவதும்; ஏழைகளுக்கு எதிர்ப்பாளனாகவும்; கோள் சொல்வதில் மிகுந்த திறமைசாலியாகவும் இருந்தான் புண்டரீகன். ஆனால், புண்டரீகன் மனைவியோ, முழுவதுமாகக் கணவர் மனம் கோணாமல் நடந்து கொண்டாள். ஆம்! கணவரே தெய்வம் என நடந்து கொண்டாள்.
திடீரென்று ஒருநாள்… புண்டரீகனின் மனைவி அவனை நெருங்கினாள்; யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை; பகவான் பண்டரிபுரத்தில் வந்து எழுந்தருளத் தீர்மானித்து விட்டாரோ என்னவோ? அவர்கள் இருந்த ஊரில் பாகவதர் ஒருவர், ‘காசி காண்டம்’ எனும் நூலைப் படித்துச் சொற்பொழிவு செய்துவந்தார். அதைக் கேட்க அந்த ஊரிலிருந்த பலரும் போய்க் கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்த புண்டரீகன் மனைவி, தானும் அந்தக் கதாகாலட்சேபத்திற்குப் போக விருப்பம் கொண்டாள்; கணவரிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்; ‘‘காசி காண்டம் கதாகாலட்சேபம் நடக்கும் இடத்திற்கு என்னை அழைத்துப்போக வேண்டும்’’ என வேண்டினாள். புண்டரீகன் மறுத்தான்; ‘‘அடிப் பைத்தியக்காரி! வீட்டில் பற்பல வேலைகள் இருக்கும்போது, அதை விட்டுவிட்டுப் போய்ப் புராணம் கேட்டால் சோறு கிடைக்குமா? தங்கம் கிடைக்குமா? மேலும் அப்படிப்பட்டப் புண்ணியக் கதைகளைக் கேட்டால், அதன்படி நடக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் நரகம்தான் கிடைக்கும். ஆகையால் நான் வர மாட்டேன்’’ என்றான்.
அவன் மனைவி அதை மறுத்துக் கணவருக்கு அறவுரை சொல்லத் தொடங்கினாள்.‘‘சுவாமி! ஸ்பரிச வேதி எனும் கல்லால், இரும்பு தங்கமாக மாறுவதைப் போல, புராணங்களைக் கேட்பவன் தீய வழியைவிட்டு நல்வழியில் நடந்து முக்தியை அடைவான். புராணம் கேட்பது, தீய குணங்களை நீக்கி நற்குணங்களில் செயல் படுமாறு தூண்டும்.‘‘எனக்குத் திருமணம் ஆகும் முன்னால், நான் புராணம் கேட்பதிலேயே நாட்களைக் கழித்தேன். கல்யாணத்திற்குப் பின்னால், புராணம் கேட்பதைவிட்டு உங்களுக்குப் பணிவிடை செய்வதிலேயே கருத்தைச் செலுத்திச் செயல்பட்டு வருகிறேன். இப்போது நீங்கள் வந்தாலொழிய நான் போக மாட்டேன்.
காரணம்? கணவரை விட்டுவிட்டுப் போய்ப் பெண் ஒருத்தி புராணம் கேட்டால், அது பகவானைப் புகழ்ந்து பரமசிவனை இகழ்ந்ததற்குச் சமமாகும்’’ என்று சொல்லிக் கணவர் மனதைக் கரைத்து, பலவந்தமாக அவரையும் அழைத்துக் கொண்டு, கதாகாலட்சேபம் நடக்கும் இடத்திற்குப் போனார்கள். அங்கு ஒரு பக்கமாக அமர்ந்து இருவரும் விருப்பத்தோடு கதை கேட்டார்கள். அப்போது பாகவதர், சகரர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.‘‘முன்னோர்களான சகரர்களைக் குறித்து, அவர்கள் நற்கதி அடைய வேண்டும் என்பதற்காகப் பகீரதன், சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்தான். அந்தத் தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், தன் திருமுடியில் இருக்கும் கங்கையைப் பகீரதனுக்காக அனுப்பினார்.
‘‘கங்கா தீர்த்தம், சாம்பலான சகரர்கள் மேல்பட, அவர்கள் அனைவரும் நற்கதி அடைந்தார்கள். பசுவதை, குழந்தைகளைக் கொல்வது, பெண் கொலை, குருவை வதம் செய்வது ஆகியவைகளைச் செய்யும் கொடும்பாவியாக இருந்தாலும், கங்கையில் நீராடினால் அவர்கள் தூய்மை பெறுவார்கள், என்று கங்கா தேவியே பகீரதனுக்கு வரம் அளித்திருக்கிறாள்.‘‘காசியில் இறப்பவர்களின் வலது காதில் சிவபெருமான் தாரக மந்திர உபதேசம் செய்கிறார். அதனால் அந்த ஜீவன்கள் முக்தி அடைகிறார்கள்.
‘‘கங்கா நதிக்கரையில் உத்தமமான முனிவர்கள் எப்போதுமே இருக்கிறார்கள். அவர்களின் திருவடிகளை ஸ்பரிசித்த – தொட்ட புண்ணியவான்கள் பலர் இருக்கிறார்கள். பிரம்மாதி தேவர்கள் எல்லாம் மாறு வடிவம் கொண்டு, காசியில் தவம் செய்கிறார்கள்.‘‘அவர்கள் விரதத்தில் சிறந்தவர்களுக்கு இப்போதும் தரிசனம் தருகிறார்கள்’’ என்று கங்கையின் பெருமையையும் காசியின் பெருமையையும் விரிவாகச் சொன்னார். அவற்றையெல்லாம் கேட்கக் கேட்கப் புண்டரீகனுக்கும் அவன் மனைவிக்கும் காசிக்குச்செல்ல வேண்டுமென்ற விருப்பம் உண்டானது.
உடனே புண்டரீகன் எழுந்து பாகவதரை வணங்கினான்; ‘‘சுவாமி! அடியேன் காசி யாத்திரை செல்வதாகத் தீர்மானித்து இருக்கிறேன். ஆசி கூறுங்கள்!’’ என
வேண்டினான்.
பாகவதர் ஆசிகூறினார்; கூடவே, ‘‘உன் மனைவியையும் பெற்றோர்களையும் கூட்டிக் கொண்டு போ!’’ என்றார். புண்டரீகனும் அப்படியே செய்தான். அவன் பெற்றோர்கள் விவரமறிந்து மகிழ்ந்தார்கள். போகும் வழியில் தேவைப்படும் பொருட்கள் முதலானவற்றை எடுத்துக் கொண்டு மகனையும், மருமகளையும் பின் தொடர்ந்தார்கள். வழியில் ஆங்காங்கே தங்கினார்கள். அப்போதெல்லாம் புண்டரீகனின் தாயும் தந்தையும், மகனுக்கும் மருமகளுக்கும் உணவு சமைத்து அவர்களே ஊட்டினார்கள். புண்டரீகனும் அவன் மனைவியும், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் கங்கா தேவியையும் துதித்துக் கொண்டே போனார்கள்.
புண்டரீகனின் மனைவியால் நடக்க முடியவில்லை. அதைக் கண்ட புண்டரீகன், மனைவியைத் தூக்கித்தோளில் வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். அதே சமயம், புண்டரீகனின் பெற்றோர்கள் வயது முதிர்ந்த நிலையிலும், வழிநடைப் பயணத்திற்குத் தேவையான பொருட்களையும் சுமந்து கொண்டு, நடந்து வந்தார்கள். அதைப் பற்றிக் கவலையே படாமல் புண்டரீகன் தன் மனைவியைத் தோளில் சுமந்தபடி நடந்து கொண்டிருந்தான். அனைவருமாகக் காசியை அடைந்தார்கள். அங்கு குக்குட ரிஷியின் இருப்பிடமான ‘அசி’ என்னுமிடத்தில் தங்கினார்கள். அங்கு பலரும் குக்குட ரிஷியின் மகிமையைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதைக் கேட்ட புண்டரீகனுக்கு, உடனே போய்க் குக்குட ரிஷியைப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது; ஓடினான் மகரிஷியின் ஆசிரமம் நோக்கி. புண்டரீகன் போன நேரம்! அங்கே குக்குட முனிவர் ஆசிரமத்தில் இல்லை. ஆனால், மிகவும் அழகான பெண்கள் ஐவர், அங்கே மிகுந்த பரபரப்போடு வேலைசெய்து கொண்டிருந்தார்கள். பலவிதமான ஆபரணங்கள் பூண்டு, அலங்காரங்களும் விசித்திரமான ஆடைகளும் பூண்டிருந்த (கங்கா, யமுனா, சரஸ்வதீ, நர்மதை, கௌதமீ) அந்த ஐவரையும் பார்த்தவுடன் புண்டரீகன் ஆச்சரியப்பட்டான்.
‘‘யார் இவர்கள்? பூவுலகப் பெண்களா? அல்லது தேவலோகப் பெண்களா? அகலிகை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி எனும் பஞ்ச (5) கன்னிகைகளா? ஒருவேளை இவர்கள் பூதேவி, ஸ்ரீதேவி, பவானி, பாகீரதி, பாரதி எனும் ஐவராக இருப்பார்களோ? இல்லாவிட்டால் அனசூயை, ரேணுகை, பிருந்தை, இந்திராணி, அருந்ததி எனும் ஐவராக இருக்க வேண்டும்!’’ எனத்துதித்து வியந்தான் புண்டரீகன்.
(இதன் மூலம் புண்டரீகன் ஞான நூல்களில் மிகுந்த பயிற்சி உள்ளவன் என்பது விளங்கும்)அதே சமயம் வேர்வை சிந்த, மிகுந்த பரபரப்போடு உணவு வகைகளைத் தயார் செய்து கொண்டிருந்த அவர்களைக் கண்டு வருந்தினான்; ‘‘புண்ணியசாலிகளான பெண்களே! தேவலோகப் பெண்களைப் போலவும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவும் காட்சி அளிக்கிறீர்களே! ‘‘இந்த வேலைகளையெல்லாம் நீங்கள்தான் செய்ய வேண்டுமா? பணிப் பெண்கள் இல்லையா? உள்ளங்கைகள் நோகும் படியாக, இவற்றையெல்லாம் யாருக்காகத் தயார் செய்கிறீர்கள்? நீங்கள் யார்? எங்கு வசிக்கிறீர்கள்? ‘‘உங்கள் கைகள் நோக, கால்கள் வருந்தும்படியாகச் செய்யும் இந்த மடப்பள்ளி வேலையை நிறுத்துங்கள்! நீங்கள் ஐவரும் செய்யும் இந்தச் சமையல் வேலையை நானே செய்கிறேன். உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால், என் மனைவியை விட்டுச் செய்யச் சொல்கிறேன்’’ என்றான்.
அதைக் கேட்ட அந்த ஐந்து பெண்களும் (பஞ்ச கங்கை) வியந்தார்கள். கூடவே பெரும்கோபம் வந்தது.‘‘பெரும்பெரும் முனீஸ்வரர்கள் கூடப்பார்க்க முடியாத நாம், பெற்றோர்களை வதைத்துக் கொடுமைப் படுத்தும் இவன் பார்வையில் எப்படி வெளிப்பட்டோம்?’’ என்று எண்ணினார்கள்.‘‘மூடனே! பஞ்சமா பாதகா! யம காதகா! சீக்கிரம் இந்த இடத்தை விட்டுப்போ!’’ என்று அதட்டினார்கள். உடனே புண்டரீகன், அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டு, ‘‘புனிதவதிகளே! உங்கள் பெயர்களையும் நீங்கள் யாருக்காக இங்கே வேலை செய்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்! இந்த இடத்தைவிட்டு உடனே போய் விடுகிறேன்’’ என்றான்.
அந்தப் பெண்கள் தங்கள் பெயர்களைச் சொல்லிவிட்டு, ‘‘குக்குட மகரிஷிக்காகத் தான், நாங்கள் இங்கே சமையல் வேலையைச். செய்து கொண்டிருக்கிறோம். நீ போ!’’ என்றார்கள். புண்டரீகன் விடவில்லை; ‘‘நீங்கள் யார்? உண்மையைச் சொல்லுங்கள்!’’ என வற்புறுத்தினான். அதைக் கேட்டதும் ஐந்து பெண்களுக்கும் கோபம் தாங்கவில்லை; ‘‘இதுவரை நீ கேட்ட கேள்விகளுக்குப் பதில்சொல்லிவிட்டோம். இதற்கு மேலும் திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தால், உன் கழுத்தைப் பிடித்துக் கங்கையில் தள்ளிவிடுவோம்’’ என்றார்கள்.
புண்டரீகன் போகவில்லை; தொடர்ந்தான்; ‘‘அம்மா! தேவதைகளே! பண்டரி புரத்தில் இருந்து புறப்பட்டு நெடுநாள் நடந்து, பல ஊர்களைக்கடந்து இந்தக் காசிக்கு வந்தது, கங்கையில் மூழ்குவதற்காகத் தான். உங்கள் கைகளால் என்னை, நீங்களே கங்கையில் தள்ளிவிட்டால், நான் செய்த பாவங்கள் எல்லாம் உங்களைச் சேரும்; எனக்கும் பரலோகம் கிடைக்கும்.
‘‘கங்கையில் நீராடாமல் அதைப் பார்த்ததன் பலனாலேயே, பஞ்ச கன்னிகைகளுக்கு இணையான உங்கள் தரிசனம் பெற்றேன். கங்கையில் இறந்தால், எனக்கு மிகவும் உயர்ந்ததான நற்கதிதான் கிடைக்கும்’’ எனப் பலவாறாகச் சொல்லி, ஐந்து பெண்களையும் வணங்கினான். அத்துடன் சமையல் செய்வதற்காகத் தன் மனைவியையும் அழைத்தான்.
ஐந்து பெண்களும் பரபரத்தார்கள்; ‘‘முட்டாளே! எங்களை இங்கு வராமல் செய்யத்தான், நீ எங்களை வணங்கினாயா? உன் மனைவியைக் கூப்பிடாதே! நீயும் இங்கு நிற்காதே! போ!’’ என்று சொல்லிவிட்டுத் தங்கள் வேலையைக் கவனிக்கத் தொடங்கினார்கள். வேகவேகமாக அவர்கள் செய்யும் வேலைகளைப் பார்த்த புண்டரீகன், மறுபடியும் தன் மனைவியை அழைத்தான். ஐந்து பெண்களும் எல்லையில்லாத கோபம் கொண்டார்கள்; ‘‘முரடனே! உன் மனைவி இங்கு வந்தால், நாங்கள் இந்த இடத்தை விட்டு இப்போதே போய் விடுவோம். குக்குட முனிவர் வந்தால், உன்னைச் சபிப்பார்’ ’என்றார்கள். புண்டரீகன் விடவில்லை; ‘‘குக்குட முனிவர் எங்கே போயிருக்கிறார்?’’ எனக் கேட்டான்.
‘‘தாய் – தந்தையர்க்குப் பணிவிடை செய்யப் போயிருக்கிறார்’’ எனப்பதில் வந்தது. புண்டரீகனுக்குச் சந்தேகம் வந்தது; ‘‘தலைசிறந்த ஞானியான குக்குட முனிவர், தாய்-தந்தையர்க்குச் சேவை செய்யப் போனாரா? அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் என யார் மீதும் எதன் மீதும் பற்றில்லாமல் இருப்பவர், பெற்றோர்களை ஏன் விரும்ப வேண்டும்?’’ எனக் கேட்டான்.ஐந்து பெண்களும் சீறினார்கள்; ‘‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது உனக்குத் தெரியாதா? மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் நான்கில், முதன்முதலாகக் கண்கண்ட தெய்வமாக இருப்பது தாயார்தான்; இரண்டாவது, கட்டிக் காப்பாற்றிய தந்தை; மூன்றாவது, ஞான வழியைக்காட்டும் குரு; நான்காவது, முக்தியை அருளும் தெய்வம்.
‘‘முதல் படியில் ஏறாமல் மூன்றாவது படியில் பாய முடியுமா? அதுபோலப் பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்துத் தன் சுகங்களைத் துறந்து, வளர்த்த தாயும்; பாதுகாத்து வளர்த்த தந்தையும் சுமைகளைச் சுமந்து கொண்டு, உன் பின்னாலேயே வருகிறார்கள். தள்ளாத வயதுகொண்ட அவர்களை விட்டுவிட்டு, இடையில் வந்த மனைவியைச் சுமந்து கொண்டு அலைகிறாயே!’’ என்று தாய் – தந்தையரின் உயர்வைப் பற்றியும் அவர்களைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் விரிவாகச் சொன்னார்கள்.
அதன் பின் அந்த ஐந்து பெண்களும், ‘‘பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்யும் குக்குட முனிவருக்குப் பஞ்ச கங்கைகளாகிய நாங்கள் பணிவிடை செய்வதை, நேராகப்பார்த்த பின்னும், நீ சந்தேகப்பட முடியுமா?’’ என்று கேட்டுவிட்டு, வேலைகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து மறைந்தார்கள். அதைக் கண்ட புண்டரீகன், ஆச்சரியம் அடைந்தான். உடனே அந்த இடத்தைவிட்டு அகன்று, நேரே தாய் – தந்தையரிடம் சென்று, அவர்கள் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.காவடி போல் ஒன்றைக்கட்டி, அதில் முன் பக்கம் தாயையும் பின் பக்கம் தந்தையையும் வைத்துத் தூக்கிக் கொண்டு போனான். பெற்றோர்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம், தன் மனைவியைத் தூக்கிவரச் செய்தான். அனைவருமாக காசியை அடைந்தார்கள்.
(வருவான் பாண்டுரங்கன்…)
பி.என்.பரசுராமன்