திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் கட்டுமானத் தொழிலாளராக வாழ்க்கையைத் தொடங்கி வெற்றி கண்டவர். இப்போது இயற்கை விவசாயத்திலும் வெற்றி வாகை சூடி வருகிறார். ஒரு ஏக்கர் நிலத்தில் எளிய முறையில் பந்தல் அமைத்து பல்வேறு காய்கறிகளை விளைவித்து வரும் இவர் அவற்றை நேரடியாக நல்ல விலைக்கு விற்பனையும் செய்து வருகிறார். இதுகுறித்து அறிந்து பெருமாளைச் சந்தித்துப் பேசினோம். ‘ஆறாம் வகுப்பு வரைதான் படித்தேன். கட்டுமானத் தொழிலாளராக வேலைக்குச் சென்று, தொழிலை நன்றாக கற்றுக்கொண்டு பெங்களூர், மங்களூர், சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்தேன். 2019-2020 காலகட்டத்தில் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு வந்த நான் என்னுடைய அப்பா கொடுத்த ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினேன். சிறிய வயதிலிருந்தே விவசாயம் பற்றி தெரிந்திருந்ததால் பெரிய சிரமம் இருக்கவில்லை. தற்போது அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் கேரட், புடலை, அவரை, பாகல், பீர்க்கு, கத்தரி, வெங்காயம், தக்காளி, சுரைக்காய், பச்சை மிளகாய், பாலைக்கீரை, அரைக்கீரை, நூக்கல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்கிறேன்.
கடந்த மாதம் கேரட், நூக்கல் மற்றும் கீரையை அறுவடை செய்துவிட்டேன். தற்போது பந்தல் காய்கறிகள் மற்றும் தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவை விளைச்சல் தருகின்றன. இதில் பந்தல் காய்கறிகள் எனக்கு அதிக வருவாயைத் தருவதோடு மற்ற பயிர்களைப் பாதுகாக்கவும் பெரிதும் உதவி புரிகின்றன. இவைதான் தரையில் விளையும் அனைத்துக் காய்கறிகளையும் அதிக வெயில் தாக்காத வண்ணம் நிழல் தந்து காக்கின்றன. இதனால் சுரைக்காய், அவரை உள்ளிட்டவற்றில் எதிர்பார்த்ததை விட அதிக விளைச்சல் கிடைக்கிறது.
பந்தல் காய்கறியில் அவரையை 25 சென்டிலும், பாகற்காயை 25 சென்டிலும், புடலையை 30 சென்டிலும், பீர்க்கங்காயை 16 சென்டிலும் வைத்திருக்கிறோம். வரப்போரம் சுரைக்காய் வைத்திருக்கிறோம். இதில் அவரையில் 200 செடிகளும், பாகற்காயில் 280 கொடிகளும், புடலையில் 200 கொடிகளும் உள்ளன. அதேபோல் பீர்க்கு மற்றும் சுரைக்காய் தலா 150 செடிகள் உள்ளன. 2019ல் கட்டுமானத் தொழிலில் இருந்து விவசாயத்திற்கு வந்தபோது வாங்கிப் பயன்படுத்திய மரபு விதைகளைச் சுழற்சி முறையில் இன்றைக்கும் பயன்படுத்தி வருகிறேன்.
காய்கறி விதைகளை அளவு பார்த்தெல்லாம் நான் நிலத்தில் ஊன்றுவது கிடையாது. விதைகளை ஊன்றுவதற்கு முன்பே நிலத்தில் மூன்று முறை உழவு ஓட்டி கடலைப் புண்ணாக்கு, மாட்டு எரு, புங்கன் புண்ணாக்கு ஆகியவற்றை நிலத்தில் கொட்டி நான்காவது உழவு ஓட்டினேன். பின்னர் நிலத்தில் பந்தல் அமைத்தேன். இந்த பந்தலை தைல மரக்கொம்புகள் கொண்டும், சவுக்குமரக் கொம்புகள் கொண்டும் தயார் செய்தேன். பந்தலின் மேற்பரப்பில் கொடிகள் படர்வதற்காக கம்பிகளைக் கட்டி வைத்திருக்கிறேன். முதல் முறை சாகுபடி செய்தபோது விதைப்பு மற்றும் பந்தல் அமைப்பதற்கு ரூ.85,000 செலவானது. 6 வருடங்கள் கடந்தும் இந்த பந்தல் இன்னும் நல்ல நிலையில் உள்ளது
.
பாகற்காய், புடலை, சுரைக்காய், பீர்க்கு, அவரை விதைகளை ஒரு அங்குலம் அளவுள்ள குழிகளில் ஊன்றினேன். விதைகளை ஊன்றிய பின்னர் அதன் மேல் ஒரு கை அளவு எரு போட்டு மூடி விடுவேன். விதைகளை ஊன்றியவுடனே உயிர்த்தண்ணீர் கொடுப்பேன். 10வது நாளில் விதைகள் அரை அடி உயரத்திற்கு செடிகள் வளர்ந்துவிடும். இந்தத் தருணத்தில் நிலத்தில் தேவையற்ற களைகள் முளைத்திருக்கும். அவற்றைப் பிடுங்கி இரண்டு நாட்கள் காயவைத்து மீண்டும் நிலத்திலேயே உரத்திற்காக போட்டுவிடுவேன்.
இதேபோல் 15 நாட்களுக்கு ஒருமுறை கொடிகளின் நடுவில் இருக்கும் களை களைப் பிடுங்கி காய வைத்து உரமாகப் போடுவதோடு, பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல் ஆகியவற்றைத் தெளிப்போம். இதிலிருந்து சரியாக 40வது நாளில் அவரை, புடலை, சுரைக்காய், பாவை, பீர்க்கனிலிருந்து பூக்கள் வரதொடங்கும். இந்த நேரத்தில் செடிகளுக்குப் பன்னீர் திராட்சை, நாட்டுச் சர்க்கரை, இளநீர் கலவையைக் கொடுப்பேன். இதன்மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். கொடிகளில் இருந்து 45வது நாளில் காய்கறிகளை அறுவடை செய்து விற்பனை செய்ய ஆரம்பிப்பேன். அறுவடை செய்த காய்கறிகளை போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, மொரப்பூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் வாரச்சந்தைகள், உழவர் சந்தைகள், கண்காட்சி ஸ்டால்கள் உள்ளிட்டவற்றுக்கு நானே நேரடியாக எடுத்துச் சென்று விற்பனை செய்கிறேன்.
அவரைக்காய்களை மாதத்திற்கு 3 முறை அறுவடை செய்வேன். ஒரு அறுவடைக்கு 300 கிலோ என மாதத்திற்கு 900 கிலோ அவரையில் மகசூல் கிடைக்கும். இதை ஒரு கிலோ சராசரியாக ரூ.50 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். இதன்மூலம் மாதத்திற்கு ரூ45,000 வருமானமாக கிடைக்கிறது. புடலங்காய்களை 2 நாளுக்கு ஒருமுறை என மாதத்திற்கு 15 அறுவடை எடுப்பேன். இதன்மூலம் மாதத்திற்கு 3000 கிலோ மகசூல் கிடைக்கும். இதை சராசரியாக ரூ.20 என்ற கணக்கில் விற்பனை செய்வதன் மூலம் மாதத்திற்கு ரூ. 60,000 வருமானமாக கிடைக்கிறது. பாகற்காயில் மாதத்திற்கு 12 அறுப்பு. 2160 கிலோ மகசூல். இதை சராசரியாக ஒரு கிலோ ரூ.35 என விற்பனை செய்வதன்மூலம் ரூ.75,000 கிடைக்கிறது. பீர்க்கனில் தினமும் அறுவடை. ஒரு அறுவடையில் 40 கிலோ என மாதத்திற்கு 1200 கிலோ கிடைக்கிறது. ஒரு கிலோவை ரூ.40க்கு விற்பதன் மூலம் ரூ.48,000 வருமானம் கிடைக்கிறது. பெரிய அளவில் செலவு இல்லாததால் கிடைக்கும் வருவாயில் முக்கால் பங்குக்கு மேல் லாபம்தான்’’ என உறுதிபடக் கூறுகிறார்.
தொடர்புக்கு:
பெருமாள்: 97868 71212.
காய்கறிகளில் இசைக்கருவிகள்!
வேளாண் பொருட்கள் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க பல்வேறு இயக்கங்கள் உலகம் முழுக்க இயங்கி வருகின்றன. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இசைக்குழு தற்போதைய ட்ரென்டிங் இயக்கமாக மாறி வருகிறது. இயற்கைக் காய்கறிகளை இசைக்கருவியாக மாற்றி இசை நிகழ்ச்சிகளை நடத்துவதுதான் இந்தக்குழுவின் பிரதான பணியே. லண்டன் வெஜிடபிள் ஆர்க்கெஸ்ட்ரா என்ற பெயரில் இயங்கும் இந்த இசைக்குழு கேரட், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, சுரைக்காய் போன்ற காய்கறிகளை புல்லாங்குழல், நாதஸ்வரம், ட்ராம்பெட் போன்ற இசைக்கருவிகளாக மாற்றி இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விண்ட்சர் கோட்டையில் நடைபெற்ற ஒரு இசை வரவேற்பு நிகழ்ச்சியில், இக்குழுவுடன் இணைந்து இங்கிலாந்தின் மன்னர் 3ம் சார்லஸ் கேரட்டில் உருவாக்கப்பட்ட புல்லாங்குழலை வாசித்து, டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் பாடலை இசைத்தார். இது சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த இசைக்குழு செல்லும் இடங்களுக்கெல்லாம் இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள் செல்கின்றன. அவற்றை வைத்து விதம் விதமான இசைக்கருவிகளை வடிவமைத்து மேடைக்கு எடுத்துச் செல்லப்படுவதும், நிகழ்ச்சிக்குப் பிறகு இசைக்காக பயன்படுத்தப்பட்ட காய்கறிகள் சூப்பாக மாற்றப்பட்டு, பார்வையாளர்களுக்கு வழங்கப்படு வதுதான் ஹைலைட்!