சென்னை: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (42). இவர் மீது கர்நாடகா மாநிலம் காவூர் தட்சிண கன்னடா காவல் நிலையத்தில், கடந்த 2011ம் ஆண்டு சட்ட விரோதமாக கூடுவது, பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது, அரசு ஊழியரை கடமை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து, பிரசாந்தை கைது செய்வதற்காக போலீசார் தேடி வந்தனர்.
2016ம் ஆண்டு தட்சிண கன்னடா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெண் ஒருவர் புகார் அளித்ததின் பேரிலும் இவர் மீது எல்ஓசி போடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குவைத்தில் இருந்து பிரசாந்த் வந்தார். குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் அவர் 13 ஆண்டு தலைமறைவு குற்றவாளி என தெரிந்தது. போலீசார் பிரசாந்தை கைது செய்து, மங்களூர் மாநகர காவல் ஆணையரகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கர்நாடக போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்து பிரசாந்தை அழைத்து சென்றனர்.