பந்தலூர் : பந்தலூரில் தொடரும் கனமழையால் அத்திமாநகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மேகமூட்டத்துடன் கூடிய கனமழை நீடித்து வருகிறது. நேற்று மதியம் திடீரென பெய்த கனமழை காரணமாக பந்தலூர் பஜார் மற்றும் காலனி சாலை வெள்ளக்காடாக மாறியது.
பந்தலூர் அருகே தேவாலாவில் இருந்து அத்திக்குன்னு, உப்பட்டி செல்லும் சாலை அத்திமாநகர் பகுதியில் சாலையோரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு நெல்லியாளம் நகராட்சியின் 11ம் வார்டு கவுன்சிலர் ஆலன் சென்று பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி மூலம் நிலச்சரிவை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழைக்கு இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் நின்ற கார் ஒன்று அடித்துச்செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.