பந்தலூர் : பந்தலூர் அருகே பழைய நெல்லியாளம் முதல் கொளப்பள்ளி செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய நெல்லியாளம் முதல் நெல்லியாளம் டேன்டீ மற்றும் கொளப்பள்ளி செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.
பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல்வேறு புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுற்று வட்டார பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தினந்தோறும் ஆட்டோ உள்ளிட்ட ஏராமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகிறது.
தற்போது சாலை பழுதடைந்து பல்லாங்குழி சாலையாக இருந்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.