நன்றி குங்குமம் டாக்டர்
உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயில் பல்வேறான புற்றுநோய்கள் உள்ளன. அதில் மிகவும் அரிதானது கணைய புற்றுநோய். ஆனால், மிகவும் கொடுமையானது. ஏனென்றால் இந்நோய் முற்றிய நிலையிலேயே தெரிய வருகிறது. அதனால் இதில் ஆபத்து அதிகம். இப்புற்று நோய் பொதுவாக 60 – 70 வயதினைக் கடந்தவர்களையே பாதிக்கிறது. இந்நோய் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் அஜித் பை.
கணையப் புற்றுநோய்
கணையப் புற்றுநோய் (Pancreatic cancer) என்பது கணைய திசுக்களில் அதிகளவில் புற்றுநோய் செல்கள் உருவாகும் நிலை ஆகும். கணையம் வயிற்றுக்கு பின்னால் உள்ள வயிற்றுக் குழியில் இருக்கும் ஒரு உறுப்பு. பொதுவாக கணையம் நமது உடலில் உருவாகும் கொழுப்பு மற்றும் புரதத்தை செரிக்கக் கூடிய வேலையை செய்கிறது. மேலும் நமது உடலுக்கு தேவையான இன்சுலினை சுரந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
கணையத்தின் எந்தப் பகுதியிலும் புற்றுநோய் செல்கள் ஏற்படலாம். இருப்பினும், கணையத்தில் புற்றுநோயை உருவாக்கும் மிகவும் பொதுவான பகுதி, கணையத்திலிருந்து செரிமான அமைப்புக்கு செரிமான சாற்றைக் கொண்டு செல்லும் குழாயான அடினோகார்சினோமாவில்தான் அதிகம் ஏற்படுகிறது. உதாரணமாக, 100 பேருக்கு கணைய புற்றுநோய் இருக்கிறது என்றால், அதில் 25 பேருக்கு கணையத்தில் மட்டும்தான் இருக்கும் வேறு எங்கும் பரவாது. சிலருக்கு ரத்த நாளம், சிலருக்கு குடலை ஒட்டி இருக்கும் அல்லது நுரையீரலில் பரவியிருக்கும். மிகவும் குறைவானவர்களுக்கே கணைய புற்று நோய் ஏற்படுகிறது. இருந்தாலும், கணையப் புற்றுநோய் வந்துவிட்டால், மிக விரைவாக உடல் முழுவதும் பரவி, மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது.
கணைய புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
சிகரெட் புகைப்பது, வயது முதிர்வு, நாள்பட்ட கணைய அழற்சி, நீரிழிவு நோய், அதிகமாக மது அருந்துவது மற்றும் உடல் பருமன் ஆகியவை கணைய புற்றுநோய் உருவாவதற்கான காரணிகள் ஆகும். அதுபோன்று, இதுவும் ஒரு பரம்பரரை நோயாகும். குடும்பத்தில் யாருக்கேனும் இந்நோய் இருந்திருந்தால், மற்ற நபருக்கு வர வாய்ப்பு அதிகமுள்ளது.
கணைய புற்றுநோயின் அறிகுறிகள்…
கணையப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில், இது மற்ற உறுப்புகளுக்கு பரவும் வரை அதன் அறிகுறிகள் எதுவும் தெரியாது. மேல் வயிற்றில் வலி, முதுகில் தொடர் அசௌகரியம், பசியின்மை, எடை இழப்பு, மஞ்சள் காமாலை, சரும அரிப்பு, சோர்வு போன்றவை இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு கணையபுற்றுநோய் வந்ததும், திடீரென சர்க்கரை நோயும் உருவாகிவிடும்.
கணைய புற்றுநோயின் வகைகள் எத்தனை..
கணையம் நாளமில்லா சுரப்பி மற்றும் எக்ஸோகிரைன் சுரப்பி ஆகும். நாளமில்லா சுரப்பிகள் ரசாயனங்களை நேரடியாக ரத்த ஓட்டத்தில் சுரக்கின்றன, அதே சமயம் எக்ஸோகிரைன் சுரப்பிகள் ஒரு குழாய் வழியாக ரசாயனங்களை சுரக்கின்றன. கணையத்தில் உருவாகும் புற்றுநோயின் தோற்றத்தைப் பொறுத்து, கணைய புற்றுநோய் இரண்டு வகைகளாக உள்ளது, அவை: எக்ஸோகிரைன் கணையப் புற்றுநோய் . இதில், பெரும்பாலான கணையக் கட்டிகள் புற்றுநோயாகும். ராட்சத செல் கார்சினோமா, அடினோஸ்குவாமஸ் கார்சினோமா மற்றும் அசினார் செல் கார்சினோமா ஆகியவை பல்வேறு வகையான எக்ஸோகிரைன் கணைய புற்றுநோயாகும்.
நாளமில்லா கணைய புற்றுநோய்: இந்த வகை கணைய புற்றுநோய் பொதுவானது அல்ல. எண்டோகிரைன் கணைய புற்றுநோயின் வகைகள் சோமாடோஸ்டாடினோமாக்கள், இன்சுலினோமாக்கள் மற்றும் குளுகோகோனோமாக்கள் ஆகும்.
கணைய புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?
நோயின் தாக்கத்தைப் பொறுத்து, கீமோ தெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கீமோதெரபி: கீமோதெரபியில் புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்துகளின் பயன்பாடு அடங்கும். புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் பரவும் போது இது பயனுள்ளதாக இருக்கும். கதிர்வீச்சு சிகிச்சை: புற்றுநோய் செல்களை அழிக்க அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சுகளைப் பயன்படுத்தப்படுகிறது.
அறுவை சிகிச்சை: கட்டியை முழுமையாக அகற்ற அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. இதில் பெரும்பாலும், அறுவைசிகிச்சைதான் நிரந்தர தீர்வாக காணப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ய முடியாத சூழலில் இருக்கும் நோயாளிகளுக்குத்தான் கீமோ தெரபியும், கதிர்வீச்சு சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இவை நிரந்தர தீர்வாக இருக்காது. மேலும், தற்போது லேட்டஸ்ட் சிகிச்சையாக இமினோ தெரபி செய்யப்படுகிறது. ஆனால், இதை எல்லோருக்கும் பயன்படுத்த முடியாது. தேவைபடுபவர்களுக்கு மட்டுமே செய்யப்படும் என்றார்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்