சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.64.53 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டும் திட்டம் 2008ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 265 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் ேநற்று திறந்து வைத்தார். அதன் விவரம்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதியின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம் – பெரியநாயக்கன்பாளையம், கடலூர் மாவட்டம் – மங்களுர் மற்றும் பண்ருட்டி, ஈரோடு மாவட்டம் – அம்மாபேட்டை, கன்னியாகுமரி மாவட்டம் – தோவாளை, புதுக்கோட்டை மாவட்டம் – குன்றாண்டார்கோவில், தென்காசி மாவட்டம் – ஆலங்குளம், தஞ்சாவூர் மாவட்டம் – மதுக்கூர் மற்றும் சேதுபாவாசத்திரம், தேனி மாவட்டம் – சின்னமனூர்,
தூத்துக்குடி மாவட்டம் – கருங்குளம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – புள்ளம்பாடி, திருப்பூர் மாவட்டம் – பொங்கலூர், விழுப்புரம் மாவட்டம் – கானை, மேல்மலையனூர், முகையூர் மற்றும் வானூர் ஆகிய இடங்களில் ரூ.64 கோடியே 53 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வனத்துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சி.வி. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.