நாகர்கோவில்: குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் புத்தேரி ஊராட்சி மன்ற தலைவராக கண்ணன் என்பவர் கடந்த 2020ல் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அவர் மீது அப்பகுதியில் நன்செய் நிலங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி விரிவான விசாரணை நடத்த குமரி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் கலெக்டர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘புத்தேரி ஊராட்சி பகுதியில் நன்செய் நிலங்களில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியது தொடர்பாக புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவரம் தற்போது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.