செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் 2022 ஜூலை மாதம் வரை கேளம்பாக்கம் ஊராட்சியில் தீர்மான நகல்கள், வரவு செலவு கணக்குகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டுள்ளார். அதற்கு திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து கேளம்பாக்கம் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்கள் மற்றும் வரவு செலவு கணக்குகளை கண்ணனுக்கு அனுப்பி வைத்தனர். அதில், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கேளம்பாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வரி என்கிற பெயரில் வசூல் செய்து அதனை ஊராட்சி நிதியில் வரவு வைக்காமல் கையாடல் செய்தது, அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் போன்றவற்றில் பணிகள் செய்யாமல் போலி பில் மூலம், ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான எல்லப்பன் மற்றும் ஊராட்சி செயலாளர் அனிதாவின் கணவரான ராஜிக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு முறைகேடாக பணி வழங்கியது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், ஊராட்சி நிதியில் இருந்து சுமார் ரூ.1 கோடிக்கு மேல் ஊராட்சி தலைவர் ராணி எல்லப்பன் மற்றும் ஊராட்சி செயலாளர் அனிதா ஆகியோர் முறைகேடு செய்ததாகவும், எனவே உரிய விசாரணையை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் ராகுல்நாத்திடம் புகார் மனு அளித்தனர்.