Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.64.53 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.64.53 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.11.2024) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.64 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்கல், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனை திறம்பட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகவும், ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நல்ல காற்றோட்டமான அலுவலக சூழலில் பணியாற்ற ஏதுவாகவும், பழைய பழுதடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் 2008-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 312 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 265 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

புதிதாக கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதியின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம் - பெரியநாயக்கன்பாளையம், கடலூர் மாவட்டம் - மங்களுர் மற்றும் பண்ருட்டி, ஈரோடு மாவட்டம் - அம்மாபேட்டை, கன்னியாகுமரி மாவட்டம் - தோவாளை, புதுக்கோட்டை மாவட்டம் - குன்றாண்டார்கோவில், தென்காசி மாவட்டம் - ஆலங்குளம், தஞ்சாவூர் மாவட்டம் - மதுக்கூர் மற்றும் சேதுபாவாசத்திரம், தேனி மாவட்டம் - சின்னமனூர், தூத்துக்குடி மாவட்டம் - கருங்குளம்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - புள்ளம்பாடி, திருப்பூர் மாவட்டம் - பொங்கலூர், விழுப்புரம் மாவட்டம் - கானை, மேல்மலையனூர், முகையூர் மற்றும் வானூர் ஆகிய இடங்களில் 64 கோடியே 53 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வனத்துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.