ரெட்டிச்சாவடி : தூக்கணாம்பாக்கம் அருகே உள்ளேரிப்பட்டு கிராமத்தில் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே உள்ளேரிப்பட்டு கிராமம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயம், தினக்கூலி வருமானத்தை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்த கிராமங்களின் பிரதான சாலை, புதுச்சேரி பகுதியான பாகூர், தமிழக பகுதியான தூக்கணாம்பாக்கத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. சேதமடைந்து இருந்த இந்த சாலை, சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், உள்ளேரிப்பட்டு குடியிருப்பு பகுதியில் மட்டும் சிமெண்ட் சாலையாக மாற்றப்பட்டது. மற்ற பகுதியில் உள்ள சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், 4 கி.மீ. தூரமுள்ள இந்த சாலை மேலும் மோசமடைந்து, ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மழை காலங்களில் குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி
வருகின்றனர்.
மேலும் சாலை நெடுகிலும் சிதறிக் கிடக்கும் கூர்மையான ஜல்லிகள் அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களை பதம் பார்ப்பதால், நடுவழியில் பஞ்சராகி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், கிராம மக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். குறிப்பாக, உள்ளேரிப்பட்டு ஏரிக்கரை, கரைமேடு வாட்டர் டேங்க் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், இவ்வழியே ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற உயிர் காக்கும் அவசர ஊர்திகள் விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, உள்ளேரிப்பட்டு கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்திட வேண்டும் எனவும் இப்பகுதியில் பாழடைந்து காணப்படும் பேருந்து நிலையத்தையும் சீரமைத்து மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின் விளக்குகள் அமைக்கப்படுமா? கரைமேடு-உள்ளேரிப்பட்டு சாலையில் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் குழந்தைகளை மாலை நேரங்களில் டியூஷன் அழைத்து செல்லும் பெற்றோர்களும், வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் மற்றும் வயதான வாகன ஓட்டிகளும் இருள் சூழ்ந்த சாலையில் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. போதிய வெளிச்சம் இல்லாததால், அடிக்கடி பலர் விபத்துகளிலும் சிக்குகின்றனர். ஆகையால் மின் விளக்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கேட்டுக்கொண்டனர்.
குடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்க வேண்டும்: உள்ளேரிப்பட்டு, கரைமேடு உள்ளிட்ட பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் மின் மோட்டார் அமைத்து குடிநீர் எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கோடை காலத்தை கருத்தில் கொண்டு, குடிநீர் வினியோகம் தடைபடாமல் பொதுமக்கள் அனைவருக்கும் தெரு குழாய்களில் குடிநீர் கிடைக்கும் வகையில், கூடுதல் நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.