திருத்துறைப்பூண்டி நவ. 9: திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகதீசன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக தனி அலுவலகம் செயல்படுகிறது. அனைத்து உதவிகளுக்கும் திருவாரூர் செல்ல வேண்டி இருப்பதால் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு தனி அலுவலரை நியமிக்க வேண்டும்கிறோம். குறிப்பாக முத்துப்பேட்டையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் இரண்டு பஸ்கள் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இல்லையென்றால் கார், ஆட்டோ போன்ற வாகனங்களில் அதிக வாடகை செலுத்தி, செல்ல வேண்டிய சூழல் உள்ளது. குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. எனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, தனி அலுவலரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.