சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே 26 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன பஞ்சபூத சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தனவாசி பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் வளாகத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினந்தோறும் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 26 அடி உயரம் கொண்ட 20 டன் எடையுள்ள பஞ்சபூத சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கயிலாய வாத்தியங்கள் முழங்க இரண்டு ராட்சத கிரேன்களை பயன்படுத்தி 26 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் சிவ பக்தர்களின் வழிபாட்டுடன் பிரதிஷ்டை செய்து அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத சிவலிங்கத்தை வழிபட்டனர். உலகத்திலேயே முதன்முறையாக இக்கோயிலில் 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சிவ பக்தர்கள் தெரிவித்தனர்.