மண்டபம் : ராமநாதபுரம் அருகே பனைக்குளம் முதல் தேவிபட்டிணம் செல்லும் நெடுஞ்சாலையில் கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிவதால், வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.மண்டபம் ஒன்றிய பனைக்குளம் பகுதியில் இருந்து தேவிபட்டிணம் பகுதிக்கு செல்வதற்கு தமிழக நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையில் ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பிரிவாக நதிப்பாலம் பகுதியிலிருந்து குறுக்கு சாலையாக தேவிபட்டிணம் பகுதிக்கு செல்லலாம். இதனால் அதிகமான வாகனங்கள் பனைக்குளம், புதுவலசை தேர்வு போகி ஆகிய பகுதிகள் வழியாக தேவிபட்டிணம் செல்கின்றன.
இதனால் இந்த சாலையில் எந்த நேரமும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இந்நிலையில் இந்த சாலையில் அதிகமான கால்நடைகள் சுற்றி திரிகின்றன. மேலும் இந்த கால்நடைகளால் அதிகமான விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல கால்நடை உரிமையாளர்களை வரவழைத்து விழிப்புணர்வுகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


