விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள நரசிங்கனூர் பூரி குடிசை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பனைத்திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி பனை கனவு திருவிழா என்ற பெயரில் 4வது ஆண்டு நிகழ்வு கடந்த வாரம் நரசிங்கனூர் கிராமத்தில் நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளைப் போலவே பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு திருவிழா போலவே நடந்து முடிந்தது இந்த பனைத்திருவிழா. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பனையேறும் தொழிலாளர்கள், மரபு விதை சேகரிப்பாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி பலரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது. எண்ணிக்கை என்று பார்த்தால் சுமார் 3 ஆயிரம் பார்வையாளர்கள் இதில் பங்கேற்றனர். 300க்கும் மேலான பனையேறும் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தோடு கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில் பனை மரத்தில் இருந்து கிடைக்கப்படும் பதநீர், கிழங்கு, நுங்கு, பாளை உள்ளிட்ட பொருட்களோடு முதலில் ஊர்வலம் நடத்தப்பட்டது. மேலும் இந்த ஊர்வலத்தில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள், கலைப்பொருட்களையும் எடுத்துச் சென்றனர். இந்தப் பொருட்களை ஊர்வலமாக எடுத்துச்சென்ற நிகழ்வு கோயில் விழாக்களை நினைவுபடுத்துவதாக இருந்தது. ஊர்வலம் சென்ற மக்கள் நிறைவாக, ஊருக்கு நடுவே இருந்த பனங்காட்டில் பனை பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர். இதன்மூலம் பனைமரத்தின் தொன்மையையும், அது நமக்கு தெய்வம் போல இருந்து வழிநடத்துவதையும் இளம் தலைமுறையினருக்கும்
வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து விழாவின் ஒரு பகுதியாக பனை ஏறும் வீர விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏறு தழுவுதல் போல பல இளைஞர்கள் பனை ஏறி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். இதில் சிறப்பாக மரம் ஏறிய மூவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சேலத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் 11.05 வினாடிகளில் பனையில் ஏறி இறங்கி முதல் பரிசைத் தட்டிச் சென்றார். மாலையில் அரங்க நிகழ்வுகள் தொடங்கின. பறை இசையோடு பல வகையான ஆடல் பாடல்களோடு நடந்தேறிய இந்த நிகழ்வில் பனையின் பெருமையை கலைஞர்களும், அறிஞர்களும் பறைசாற்றினர். விழாவில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட பல வகையான பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது. அதை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். நிகழ்வின் முத்தாய்ப்பாக 500 பேர் பங்கேற்ற மாவளி சுற்றும் நிகழ்ச்சி நடந்தேறியது. 500 பேர் இணைந்து சுற்றிய மாவொளியில் இரவு பகல் போல் பிரகாசித்தது.