*சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
பணகுடி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பணகுடி அருகே கன்னிமார் தோப்பு நீரோடையில் நீர்வரத்து அதிகரித்து. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.நெல்லை மாவட்டம் பணகுடி அருகே குத்தரப்பாஞ்சான் அருவி உள்ளது. இதில் இருந்து வரும் தண்ணீர் அருகில் உள்ள கன்னிமார் தோப்பு ஓடை வழியாக செல்கிறது.
இந்த ஓடையில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வார்கள். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றுமுன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன்னிமார் தோப்பு நீரோடையில் ரம்மியமான சூழல் காணப்பட்டது.
இடையிடையே சாரல் மழை பெய்ததால் கன்னிமார் தோப்பில் நீர்வரத்து அதிகரித்து. இதனால் பணகுடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையான கோடை வெயிலில் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று காலையில் இருந்து மாறிய சீதோஷ்ண நிலை மாறி ரம்யமான சூழலை அனுபவித்த படி கன்னிமார் தோப்பு நீரோடையில் குளித்து மகிழ்ந்தனர்.