*தாழ்வான மின்வயர்களால் விபத்து அபாயம்
* அச்சத்துடன் கடந்து செல்லும் மக்கள்
பணகுடி : பணகுடி அருகே நதிப்பாறை பகுதியில் ஒரே தெருவில் 10 மின் கம்பங்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் தாழ்வான நிலையில் மின் வயர்கள் செல்வதால் வாகனங்கள் விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
பணகுடி பேரூராட்சி நதிப்பாறை மெயின்ரோட்டில் சுடலை கோயில் இருந்து வனத்துறை சோதனை சாவடி செல்லும் பாதையில் மின்வயர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. இந்த பாதையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் அப்பகுதியில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மக்கள் அச்சம் ெதரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் சுமார் 10க்கு மேற்பட்ட மின்கம்பங்களும் பழுதாகி காணப்படுகிறது. தற்போது காற்று வீசுவதால் அதில் மின்கம்பங்கள் அசைந்தாடிய படி உள்ளது. இதனால் எப்போது விழுமோ என்கிற அச்சத்தில் அவ்வழியாக செல்வோர் உயிரை கையில் பிடித்தபடி நடந்து சென்றனர்.
முக்கிய தெரு என்பதால் இவ்வழியாக தினமும் பள்ளி மாணவர்கள் நடந்து செல்வதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவேசுடலை கோயிலில் இருந்து வனத்துறை சோதனை சாவடி செல்லும் பாதையில் உள்ள தாழ்வான மின்வயர்களை உயரமாக அமைத்தும், பழுதான மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.