ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தை வரும் பிப்.28ம் தேதி பிரதமர் மோடி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப். 26ம் தேதி ராமநாதபுரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராமநாபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் ரூ..550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக தயாராகி உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை, கடந்த இரு வாரமாக ரயில்வே நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்த சூழலில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் தமிழகத்துக்கு வருகை தர உள்ளனர்.
இந்த பயணத்தின்போது பிப்.28ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் வரும் பிப்.26ம் தேதி ராமநாதபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட பாஜ அலுவலக திறப்பு விழாவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அழைத்துள்ளனர். ஆனால், திறப்பு விழாவுக்கு அமித்ஷா வருவது இதுவரை உறுதி செய்யப்படவில்லையென ராமநாதபுரம் பாஜ மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோல வரும் பிப்.28ம் தேதி பாம்பன் பாலம் திறப்பு விழா தேதி ரயில்வே தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.
இதுகுறித்து நேற்று பாம்பனில் ஆய்வுக்கு வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறுகையில், ‘‘பாம்பன் புதிய ரயில் பால திறப்பு குறித்த அதிகாரபூர்வ தேதியை ரயில்வே ஆணையம் சில தினங்களில் அறிவிக்கும். இம்மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் திறப்பு விழா நடைபெறலாம். ராமேஸ்வரம் புதிய ரயில் நிலைய கட்டுமான பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜூன் மாதம் ரயில் நிலையம் முழுமையாக தயாராகிவிடும். ரயில் பாலம் திறப்புக்கு பின் கூடுதலாக புதிய ரயில்கள் இயக்கப்படும். திறப்பு விழா நிகழ்வுடன் பொது நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பழைய ரயில் பாலம் வழுவிழந்துள்ளது. அதைத் தொடர்ந்து இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால், அதனை அகற்றி அடையாளமாய் வைக்கப்படும்’’ என்றார். முன்னதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தை பார்வையிட்டார். தொடர்ந்து புதிய ரயில் பாலம் திறப்பு குறித்த முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.