சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்திருந்தது. ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. நேற்று முன்தினம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கையும், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கேரளா மாநிலத்திற்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் நாளை அதி கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.