ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க பிரதமர் மோடி வருவது உறுதியாகி விட்டதால், அதற்கான முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு குறித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மின்சார ரயில் பாலத்தை இன்னும் இரண்டு வாரத்திற்குள் பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். இதனால் ரயில்வே நிர்வாகம் இம்மாத துவக்கத்தில் இருந்து திறப்பு விழாற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து, புதிய பாலத்தை தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்தை பிரதமர் மோடி கொடியசைத்து திறப்பதற்கு முன்பு, பழைய ரயில் தூக்கு பாலம் திறந்த நிலையில் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நூற்றாண்டு கடந்த பழைய ரயில் தூக்கு பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று முதல் பெயின்ட் அடிக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புதிய ரயில் பாலம் திறப்புக்கு பிரதமர் மோடியின் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் முன்னேற்பாடுகள் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே அதிகாரிகள், வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, இந்திய கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம், துறைமுக அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை, ஒன்றிய, மாநில புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது.
இதற்கிடையே, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நாளை ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் இறுதி ஒத்திகை நிகழ்வு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி வருவதால், ராமேஸ்வரத்தில் கோயில் சுற்றுப்பகுதி, நடுத்தெரு, மேலத்தெரு பேருந்து நிலையம் வரை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள தங்கும் விடுதிகள், வீடுகள் கடைகளின் விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் பொது நிகழ்ச்சி நடக்கவுள்ள ஆலயம், விடுதி வளாகம் சுத்தம் செய்து தயார் செய்யப்பட்டு வருகிறது.