மதுரை: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஜனவரியில் ரயில் சேவை தொடங்குவது குறித்து ரயில்வே துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரட்டை வழித்தட புதிய ரயில் பாலத்தில், பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டிய குறைகளை சரிசெய்யும் பிண கடந்த 2 வாரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதையடுத்து, ராமேஸ்வரம் – மண்டபம் வரை ஆய்வு ரயில் பெட்டியில் இருந்தபடி பாலத்தை நேற்று முன்தினம் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்நிலையில், ஹூப்ளி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4 முதல் ஜூன் 28 வரை சனிக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கும், ராமேஸ்வரம் முதல் ஹூப்ளி வரை ஜனவரி 5 முதல் ஜூன் 29 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கும் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் 2 வாரத்திற்குள் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை தொடங்க உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘பாம்பன் புதிய ரயில் பாலப்பணிகள் முழுமையாக நிறைவு பெற்று ரயில்வே வாரியத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பாலம் திறக்கும் தேதி இறுதியாகவில்லை. ஹூப்ளி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில், தற்போது ராமநாதபுரம் வரை தான் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில் என்பதால், இதனை ராமேஸ்வரம் வரை என்றுதான் அட்டவணையில் குறிப்பிடுவது வழக்கம். இதனை தவறுதலாக புரிந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் வருகிறது. எனவே, ஜனவரியில் பாலத்தை திறப்பது தொடர்பாக இதுவரை முறையாக எந்த அறிவிப்பும் வரவில்லை’’ என்றார்.