சாயல்குடி : சாயல்குடி அருகே பனைமரங்களை வெட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி அருகே நரிப்பையூர், குதிரைமொழி, 5ஏக்கர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இதில் சீசனுக்கு பதனீர் இறக்கி கருப்பட்டி உற்பத்தி செய்தல், பனங்கருப்பட்டி தயாரித்தல், பனைமட்டை, பனை நார், ஓலை மூலம் கைவினைப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பனைமர தொழிலை நம்பி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களும் உள்ளன.
இந்நிலையில் சிலர் மரப்பயன்பாடு, செங்கல்சூளை, அனல் மின்நிலையங்கள், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலை பயன்பாட்டிற்காக இப்பகுதியிலுள்ள 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை இருப்பதால், அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குதிரைமொழி பகுதி பனை தொழிலாளர்கள் கூறும்போது, வேர் முதல் ஓலை வரை பயனுள்ளதாக இருப்பதால் பூலோகத்தின் கற்பக தரு(விருட்ஷம்) என அழைக்கப்படும் பனைமரத்தை நம்பி இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பம் உள்ளது. சீசன் தொழிலாக இருந்தாலும் பாரம்பரிய தொழிலாக இருப்பதால் மாற்று தொழில் தெரியாது. இது தான் குடும்பத்தின் வாழ்வாதாரமாக உள்ளது.
இந்நிலையில் மரத்தின் உரிமையாளர்கள், வியாபாரிகளிடம் மரத்தை விலைக்கு விற்று வருகின்றனர். வியாபாரிகள் தொழிற்சாலை உள்ளிட்ட பயன்பாட்டிற்காக வெட்டி லாரிகளில் எடுத்துச் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் பனைமரம் அழியும் அபாயம் உள்ளது. ஒரு பனைமரம் பெரிய மரமாக வளர்ந்து பயன்தர 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
இதுபோன்று ஒரு பனைமரம் 100 முதல் 125 ஆண்டுகள் வரை பலன் தரும் தன்மை கொண்ட சிறப்புக்குரியது. முதிர்ச்சிக்கு பிறகு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே, அரசு விதிமுறைகளை பின்பற்றி வெட்ட முடியும் என்ற நிலையில், விதிமுறைகளை மீறி வெட்டிச் செல்வதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும் வெட்டப்பட்ட பனைமரங்களுக்கு பதிலாக இரண்டு மடங்கு புதிய பனைமரக்கன்றுகளை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Cutting of palm trees in violation of the government prohibition order: Villagers demand to stop it