நிலக்கோட்டை: பள்ளிவாசல் மேலாளரை தாக்கிய வழக்கில் அதிமுக நகர செயலாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நிலக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அதிமுக நகர செயலாளர் பீர்முகமது (47). இவர் தனது ஆதரவாளர்களான தமிம்அன்சாரி, சாகுல் அமீது, மியாக்கனி, முகமது அன்சாரி ஆகியோருடன் இணைந்து வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் மேலாளர் முகமது ரபீக் என்பவரை கடந்த 2012ல் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு நிலக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இவ்வழக்கில் மாஜிஸ்திரேட் நல்லகண்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் அதிமுக நகர செயலாளர் பீர் முகமதுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மற்ற 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.