திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள நல்லவனம் பேட்டை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள செல்வகணபதி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு கோ பூஜை, நவக்கிரக பூஜை, வாஸ்து ஹோமம் தீபாராதனை நடைபெற்றது.
இன்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி ஹோமம் நடைபெற்றது. இதன்பிறகு மேள, தாளங்கள் முழங்க புனித நீர் எடுத்துவரப்பட்டு கோபுர கலசம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அங்கு குழுமியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீ செல்வகணபதி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.