திருத்தணி: பள்ளிப்பட்டில் பட்டாசு விபத்தில் 32 பேர் எரிந்து சாம்பலான வழக்கில், தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிப்பட்டில் கடந்த 2009ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது அங்குள்ள சோளிங்கர் ரோட்டில் அரிசி ஆலை குடோனில் ஆனந்த் குமார் என்பவர் பட்டாசுகளை குவித்து வைத்து விற்பனையில் ஈடுபட்டார். இந்நிலையில், தீபாவளிக்கு முந்திய நாள் மாலை பட்டாசு வாங்க தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பட்டாசு கடையில் குவிந்து பட்டாசு வாங்கிக் கொண்டிருந்தபோது குடோனில் தீ பரவியது.
இந்த விபத்தில் குடோனில் சிக்கிக் கொண்ட 32 பேர் உடல் எரிந்து சாம்பலாகினர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யபப்ட்டு, தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவித் தொகை வழங்க பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும், 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற பென்ச் பள்ளிப்பட்டு பட்டாசு விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு நிர்ணயம் வழங்க உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் ஒரு நபர் கமிஷனாக நியமனம் செய்ய உத்தரவிட்டது. மேலும், பட்டாசு விபத்தில் உயிரிழந்தவரிகளின் குடும்பத்தினரில் 27 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும், ஐந்து குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும் இடைக்கால நிவாரணமாக வழங்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி உத்தரவிட்டனர்.
மேற்படி தொகையை நான்கு வாரத்திற்குள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் இதனால் வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடோ, ஒரு நபர் கமிஷன் அமைத்து அரசாணையோ தமிழ்நாடு அரசு பிறப்பிக்கவில்லை. எனவே, மனுதாரர்கள் சார்பில் நீதிமன்ற கண்டன வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கின் விசாரணையின்போது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழ்நாடு தலைமைச் செயலாளரையும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* பட்டாசு விபத்தில் உயிரிழந்தவரிகளின் குடும்பத்தினரில் 27 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும், ஐந்து குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும் இடைக்கால நிவாரணமாக வழங்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி உத்தரவிட்டனர்.