Monday, February 26, 2024
Home » பள்ளிபாளையம் அருகே கால்வாய் கரையில் விதிமீறி கொட்டப்படும் சாயக்கழிவுகள்

பள்ளிபாளையம் அருகே கால்வாய் கரையில் விதிமீறி கொட்டப்படும் சாயக்கழிவுகள்

by Lakshmipathi

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் அருகே இ.காட்டூர் கால்வாய் கரையில் கொட்டப்பட்டு கிடக்கும் சாய ஆலைகளின் ரசாயன இறுதி கட்ட திடக்கழிவுகளால், நீர் நிலைகள் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் வட்டாரத்தில்இ சுமார் 25 சாயச்சாலைகள் அனுமதி பெற்று இயங்குகின்றன. இந்த சாயச்சாலைகளில் வெளியாகும் கழிவுநீரை, இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தி, தண்ணீரை மறு உபயோகத்திற்கு பயன்படுத்தவும், இறுதி திடக்கழிவுகளை சிமெண்ட் ஆலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி அனுப்பி வைக்க வேண்டுமென்பதும் விதி.

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தாத புதிய ஆலைகளுக்கு, அனுமதி வழங்க கூடாது என விதிமுறை உள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் பெரும்பாலான சாய ஆலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி, அதற்கான அனுமதி கடிதத்தை மாசுகட்டுப்பாட்டு துறையில் அளித்துள்ளது. ஆனால், ஒப்பந்தத்தின் படி, கழிவுகளை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பாமல், மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் கரையில் மூட்டை மூட்டையாக கொட்டி குவித்து வருகின்றன.

ஆட்கள் நடமாட்டமில்லாத இ.காட்டூர் கால்வாய் கரையில், இரவு நேரத்தில் கொட்டப்படும் கழிவுகள் மலைபோல் குவிந்து வருகிறது. மழைக்காலங்களில் இந்த கழிவுகள் கரைந்து கால்வாயிலும், அருகில் உள்ள விவசாய நிலங்களிலும் பரவி, மண்ணை மலடாக்கும் நிலையேற்பட்டு வருகிறது. தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் கழிவுகளால், கிராமப்புறத்தின் வளம் கெட்டு, நீர்நிலைகளும் விஷமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து லோக்சக்தி கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆதவன் கூறுகையில், ‘சாயச்சாலை உரிமையாளர்களை நேரில் அழைத்து, இது குறித்து அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கை செய்ய வேண்டும். கால்வாய் கரையில் இதுவரை கொட்டியுள்ள கழிவுகளை, முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். கால்வாய் கரையிலிருந்து கழிவுகள் அப்புறப்படுத்தாவிட்டால், இரவு நேரத்தில் கழிவுகளை கொட்ட வரும் வாகனங்களை சிறைபிடித்து, இதுவரை கொட்டியுள்ள கழிவுகளை சம்மந்தப்பட்ட ஆலைகளின் வளாகத்தில் கொட்டும் போராட்டம் நடைபெறும்,’ என்றார்.

You may also like

Leave a Comment

three × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi