பல்லாவரம்: பல்லாவரம் அருகே தறிகெட்டு ஓடிய லாரி, வீட்டின் மீது வேகமாக மோதியது. இதில் 3 பெண்கள் படுகாயமடைந்தனர். தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். பல்லாவரம் அருகே திருநீர்மலை, திருமங்கை ஆழ்வார்புரம், இரட்டை மலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் ஜானகி (50). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகள் கீர்த்தனா (21), உறவினர் கவுசல்யா (23), பேர குழந்தைகள் சுர்ஜித் (3), சுஜித்ரா (1) ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கனரக லாரி திடீரென தறிகெட்டு ஓடி ஜானகி வீட்டின்மீது வேகமாக மோதியது. இதில், தூங்கி கொண்டிருந்த ஜானகி, கவுசல்யா, கீர்த்தனா ஆகிய 3 பெண்களும் படுகாயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். படுகாயமடைந்த 3 பெண்களையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மதுபோதையில் இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாஎன பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.